இந்தியாவில் கைதான இலங்கையர்கள்

இந்தியாவில் கைதான இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலர் இந்தியாவின் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தினம் மங்களுரில் வைத்து 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகத்தின் தூத்துக்குடி வரையில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பெங்களூர் வழியாக மங்களுருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் இலங்கையில் செயற்படுகின்ற இடைத்தரகர்கள் சுமார் 500000 இந்திய ரூபாய் வரையில் கட்டணமாகப் பெற்றிருப்பதாக, மங்களுர் காவல்துறை ஆணையாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

அதேநேரம் நேற்றும் இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் தமிழகம் சென்று தங்கி இருந்து 27 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

அவர்களில் 24 பேர் ஆண்கள் என்பதோடு ஓர் குழந்தையும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாம்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் பரவல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலிகள் முகாம்களில் சமூக இடைவெளியுள்ளிட்ட சுகாதார விழுமியங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக அங்கு ஆய்வுகள் நடத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.