மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முக்கிய தகவல்!

மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முக்கிய தகவல்!

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாண சபை அலுவலகங்கள், அரச பாடசாலைகள், உள்ளூர் அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனங்களில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்களை பகிருதல், வாக்குகளை இரந்து கேட்டல் மற்றும் கூட்டங்களை நடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனங்களில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது, நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் , உப அலுவலகங்களின் தலைவர்களின் பொறுப்பாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.