திருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்
திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று(செவ்வாய்கிழமை) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த பல இடங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
இத்துறை மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உட்பட அதிக பலாபலன்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது. எனவே இங்குள்ள வளங்களை பயன்படுத்தி இத்துறையை மேம்படுத்துவது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய துறைகளை அடையாளங்கண்டு முறையாக திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் உரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
2020-2023 காலப்பகுதிக்குரிய திருகோணமலை மாவட்டத்திற்கான புதிய சுற்றுலாத்துறை திறன்கள் தந்திரோபாயம் மற்றும் செயல்திட்டமானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டபோதே அரசாங்க அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதி மாவட்ட அரசாங்க அதிபரிற்கு இதன்போது உள்வாங்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எம்.மதியழகனால் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகம் மற்றும் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறைசார் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.