கொத்தமலா ஓயா பகுதியில் இருந்து சில வெடிபொருட்கள் மீட்பு
நாவலபிடிய காவல்துறைக்கு சொந்தமான வதுர தம்பகல்ல பிரதேசத்தில் இருந்து வெடிபொருட்கள் சில இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிடிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொத்மலா ஓயாவிற்கு நீராடச்சென்ற சில இளைஞர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் நாவலபிடிய காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கற்குகை ஒன்றிலிருந்து 99 டெட்டனேட்டர்களும், சுமார் ஒரு கிலோ சி-4 ரக வெடிபொருட்களும் இராணுவ உற்சவ நிகழ்வுகளில் பயன்படுத்திய 8 குண்டுகளும் காவல்துறையினரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த 99 டெட்டனேட்டர்களும் கண்டி காவற்துறை விசேட படையினரால் அவ்விடத்தில் வைத்தே பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட சி-4 ரக வெடிபொருட்கள் மற்றும் 8 குண்டுகளும் சோதனை நடவடிக்கைகளுக்காக நாவலபிடிய காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை நாவலபிடிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.