மதுபோதையில் அடாவடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள்! செய்திவெளியிட்ட ஊடகவியலாளர் விசாரணையில்

மதுபோதையில் அடாவடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள்! செய்திவெளியிட்ட ஊடகவியலாளர் விசாரணையில்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தினால் முல்லைத்தீவு ஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆனி மாதம் 16 ஆம் திகதி பேராறு பகுதியில் வீதியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் மறித்து சோதனையிட்டபோது அவர்கள் மதுபோதையில் நின்றதோடு, டிப்பர் வாகன உரிமையாளர் குறித்த இடத்திலிருந்து வாகனத்தை ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் சென்று பொலிஸாரிடம் தாங்கள் வன பரிபாலன திணைக்களம் என தெரிவித்து வாகனத்தை தாம் கொண்டு சென்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் சாரதியையும் உரிமையாளரையும் கைது செய்வதாகவும் தெரிவித்ததனை தொடர்ந்து முள்ளியவளையில் அமைந்திருக்கின்ற முல்லைதீவு வட்டார வன காரியாலய அலுவலகத்திற்கு டிப்பர் வாகனைத்தை எடுத்துச் செல்வதற்காக கோரியுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த அலுவலர்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சாரதியையும் உரிமையாளரையும் வன பரிபாலன அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏற்றியதோடு வாகனத்தை அலுவலகத்துக்கு கொண்டுவர வாகன உரிமையாளருடைய உறவினர் ஒருவரையும் பொலிசார் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் வாகனத்தை செலுத்தி சென்று நபர் முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைதீவு வட்டார வன காரியாலயத்தில் டிப்பர் வாகனத்தை நிறுத்திய பின்னர் அவரை மது போதையில் நின்ற ஒரு அதிகாரி அவர்களுடைய அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை அழைத்துச் செல்வதற்காகவும் தன்னை பார்வையிடுவதற்காகவும் வருகை தந்த தன்னுடைய தம்பி மற்றும் நண்பர் ஆகியோரையும் அறைக்குள் வைத்து அடித்ததாகவும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததோடு அந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்தார். இதேவேளை 16-06-2020 இரவு வன பரிபாலன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் டிப்பர் வாகனம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, வாகனமும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் தவசீலன் மீது திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் தங்கள் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முள்ளியவளை பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.

நேற்று மாலை ஊடகவியலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முள்ளியவளை பொலிசார் ஊடகவியலாளரை இன்று காலை 10 மணிக்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இருந்த போதும் ஊடகவியலாளர் தனக்கான அழைப்பு கடிதத்தை அனுப்புமாறு கோரிய போதும் அவர்கள் அழைப்பு கடிதத்தை அனுப்பவில்லை. இருப்பினும் இன்று காலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஊடகவியலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் இந்நிலையில் ஊடகவியலாளர் தற்போது முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக சென்றுள்ளார்.