
இலவச வெகுஜன தடுப்பூசி திட்டத்தை உடனே தொடங்க கோரிக்கை புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் உருவாகி வரும் புதிய தொற்றுகளால் மருத்துவத்துறை விழிபிதுங்கி நிற்கிறது.
இந்த நெருக்கடியான சூழலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதமாக தடுப்பூசியை பயன்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. எனவே தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதேநேரம் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதமும் எழுதியுள்ளன.
அதன்படி, நாடு முழுவதும் இலவச வெகுஜன தடுப்பூசி திட்டத்தை உடனடியாக தொடங்குமாறு பிரதமரை எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதைப்போல புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவைத்துவிட்டு, அதற்கான நிதியை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குமாறு அறிவுறுத்தி உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று அதன்மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.35 ஆயிரம் கோடியை தடுப்பூசிக்காக செலவழிக்குமாறும், உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு விரிவாக்கத்துக்கு உரிமத்தை கட்டாயமாக்கவும் கேட்டுக்கொண்டுள்ள தலைவர்கள், உள்நாடு, வெளிநாடு என அனைத்து வழிகளில் இருந்தும் தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் வலியுறுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டுக்கடிதத்தில் பல்வேறு தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரிகள் என 12 பேர் கையெழுத்து போட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இவர்களை தவிர மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), உத்தவ் தாக்கரே (சிவசேனா), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா). பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோரும் கையெழுத்திட்டு உள்ளனர்.