கத்தாரில் இருந்து மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கப்பல் மூலம் இந்தியா வந்தது

கத்தாரில் இருந்து மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கப்பல் மூலம் இந்தியா வந்தது

கொரோனா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தபோது இந்திய கடற்படை ‘‘ஆபரேஷன் சமுத்ர சேது’’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் சிக்கி தவித்த 4 ஆயிரம் இந்தியர்கள் கப்பல் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் கொரோனா 2-வது அலையால் மருத்துவ துறை ஸ்தம்பித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் பற்றாக்குறை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுக்க சமுத்ர சேது 2-வது திட்டத்தை கடற்படை தொடங்கி உள்ளது.


இதன்படி வெளிநாடுகள் வழங்கும் மருந்து பொருட்கள், ஆக்சிஜன் போன்றவை போர்க்கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதன்படி திரிகந்த் போர்க்கப்பல் மூலமாக சமீபத்தில் கத்தார் நாட்டில் இருந்து 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. இதேபோல நேற்று கத்தார் நாட்டில் இருந்து தர்காஷ் என்ற கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலமாக தலா 20 மெட்ரிக் டன் கொண்ட மேலும் 2 திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் 230 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றை மராட்டிய அரசிடம் கடற்படை ஒப்படைத்தது. இவற்றை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அமைப்பு ஒன்று கொடுத்து உதவிகரம் நீட்டியுள்ளது.