லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் -ஐ.ம.ச
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனம் அரச நிறுவனமாகும்.
எரிவாயுவின் விலையை நேரடியாக 34 ரூபாவினால் அதிகரித்தமைக்கு அமைய ஒரு கிலோகிராமுக்கான விலையில் 27 சதவீதம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் ஆயிரத்து 520 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை ஆயிரத்து 947 ரூபாவாக அதிகரிக்கின்றது.
இது பாரியளவான மோசடி செயற்பாடாகும்.
இது அரச நிறுவனம் என்ற அடிப்படையில் இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல அதிகாரிகளுக்கும் எதிராக அரசாங்கத்தினால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.