இந்தியாவால் இலங்கைக்கு ஆபத்து! எச்சரிக்கும் ரவி குமுதேஸ்

இந்தியாவால் இலங்கைக்கு ஆபத்து! எச்சரிக்கும் ரவி குமுதேஸ்

இந்தியாவின் கொரோனா நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என அரச ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அயல்நாடு என்பதால் இந்தியாவிலிருந்து வைரஸ் தொற்று இலங்கைக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து நாம் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்தியாவின் நிலைமையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது எமது நாட்டினுடைய நிலைப்பாடும் சிறந்ததாகயில்லை.

ஏனெனில் இந்தியா எமது நாட்டிற்கு மிகவும் அண்மையில் உள்ள நாடாகும். அந்த வகையில் இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் தொற்று இலங்கைக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

பிசிஆர் பரிசோதனைகளை தேவைக்கு ஏற்ப வியாபார நோக்கத்திற்காக மாற்றியமைக்கும் தேவைப்பாடு காணப்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நாம் தொடர்ச்சியாக தனியார் நிறுவனங்களின் ஊடாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சிடம் கூறியிருந்தோம். அது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

சில தனியார் ஆய்வுகூடங்களில் டிஜிட்டல் கையொப்பமொன்றை மாத்திரம் பெற்றுவிட்டு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். குறைந்த பட்சம் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

வெளியில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையானது ஒரு வியாபாரா போட்டியாக மாறியுள்ளது. அத்தகைய வியாபார போட்டியின் காரணமாக அரச ஆய்வகம் வெவ்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.