ஈஸ்டர் தாக்குதல் குறித்த மர்மமான தகவல்கள் கசிவு - புதிய விசாரணைக்கு விண்ணப்பம்

ஈஸ்டர் தாக்குதல் குறித்த மர்மமான தகவல்கள் கசிவு - புதிய விசாரணைக்கு விண்ணப்பம்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து மர்மமான தகவல்கள் கசிந்திருப்பதால் புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் அவரது மனைவியும் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் செயற்பட்டிருப்பது பல விதத்திலும் தெரியவந்திருப்பதாக மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சேனக பெரேரா கூறினார்.

கொழும்பிலுள்ள குற்றப் புலனனாய்வுப் பிரிவுக்கு இன்று சென்ற மக்கள் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்தனர்.

முறைப்பாட்டை அளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி சேனக பெரேரா,

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவுற்ற போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பல விடயங்கள் தற்போது வெளிவந்திருப்பதால் அவை குறித்தும் விசாரணைகள் நடத்தபப்ட வேண்டியது அவசியமென தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த உயிர்த்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணையொன்றை நடத்தும்படி கோரியே இன்றைய தினம் முறையிட்டிருக்கின்றோம்.

இந்த தாக்குதல் குறித்து அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைக் கடந்த காலங்களாக தெரிவித்துவந்தார்கள். அரசியலுக்காகவும் பலர் இந்த தாக்குதலைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை இன்னும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதுகுறித்த தகவல்களை தெரிந்திருப்பவர்கள் இருக்கலாம் என்கிற அடிப்படையில்தான் விசாரணையை கோருகின்றோம்.

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி திவயின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் நல்லிணக்கம் நிறுத்தம் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி அம்பலம் என்கிற தலைப்பிடப்பட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முன்னாள் புலனாய்வு இராணுவ அதிகாரி ஒருவர் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆணைக்குழுவில் இதுகுறித்து பேசப்பட்டதா என்பதுவும் எமக்குத் தெரியாது. எந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை எவராலும் நிறுத்தப்பட முடியாது.

அதேபோல அல் ஹிக்மா மற்றும் சஹாரா பவுண்டேஷன் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவுசெய்யும் விடயத்தில் புலனாய்வு அதிகாரியும் அவரது மனைவியும் தொடர்புபட்டிருப்பதுவும் வெளியாகியிருக்கின்றது.

ஆகவே இராணுவ அதிகாரி ஒருவர் இதில் தொடர்புபட்டிருப்பதால் உண்மையான சூத்தரதாரியின் மர்மமும் தொடர்கின்றது.

ஆகவே புதிய கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையே இன்றைய தினம் முறைப்பாட்டின் ஊடாக வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.