
மூக்கினுள் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் பரிதாபமாக பலி! வதந்தியால் பறிபோன உயிர்...
''மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால் கொரோனா வராது'' என்ற வதந்தியை நம்பி அதனை முயற்சித்த கர்நாடகா ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதையும் கொரோனா தொற்று தனது பிடியில் வைத்துள்ளது.
படுக்கைகள் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் வட மாநிலங்களில் கொத்து, கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர்.
இப்படி பரிதாபமாக உயிரிழப்பவர்களை கூட தகுந்த மரியாதையுடன் தகனம் செய்ய முடியாத அவல நிலைதான் பல்வேறு மாநிலங்களில் நீடித்து வருகிறது.
'Wrong Turn' படத்தில் வருவதுபோல் இரக்கமில்லாமல் மனிதர்களை கொல்லும் கொரோனவை விட கொடிய பாவிகள் சமூகத்தில் வதந்தி பரப்பி வருபவர்கள். ''உங்களுக்கு கொரோனா இருக்கிறதா? அப்போ.. இதை ட்ரை பண்ணுங்க.. தொற்று ஒரே நாளில் ஒடி விடும்'' என சம்பந்தமில்லாமல், கண்ட, கண்ட போலி மருந்துகளை பரிந்துரை செய்து நோய் இல்லாதவர்களுக்கும் நோயை சேர்த்து விடுகின்றனர் இந்த வதந்தியாளர்கள்.
வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என திரும்பும் பக்கமெல்லாம் வைரஸை விட அதிகமாக பரவி கிடக்கின்றனர் இந்த குரூர குழுவினர்.
இப்படிபட்ட வதந்தியாளர்களால் ஒரு உயிரே பறிபோன துயரம் நடந்துள்ளது.
''உங்களுக்கு கொரோனா வரும் என்ற பயம் இருக்கிறதா? அப்போ மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விடுங்க.. இப்படி செய்தால் அது ஆக்சிஜன் அளவை அதிகரித்து கொரோனாவை நம்ம பக்கம் அண்ட விடாது ' ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
அதனை ஆசிரியர் ஒருவர் முயற்ச்சி செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் குடம், குடமாக வாந்தி எடுத்துள்ளார்.
அடுத்த கணமே பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.. ''கொரோனவை அண்ட விடாது'' என்று வதந்தியாளர்கள் பரிந்துரைத்த எலுமிச்சை சாறு, ஒரு ஆசிரியரை அநியாயமாக இந்த பூமியை விட்டே கூட்டி சென்று விட்டது.
இதுபோல் வதந்தியாளர்களால் பரப்பப்படும் போலி மருந்துகள் பல்வேறு மக்களுக்கு தொடர்ந்து உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளாக இந்த பூமிப்பந்தில் நிலை கொண்டுள்ள கொரோனவை கூட இன்னும் சில வருடங்களிலாவது விரட்டி விடலாம்.
ஆனால் வைரசை விட கொடிய வதந்தியாளர்களை மாற்றுவது மிக, மிக கடினம். ஒருவரை திருத்தினாலும், உருமாறிய வைரஸ் போல மற்றவர் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.
எனவே மக்களே.. ' இது போல் போலி மருந்துகளை நம்பி விளைவுகளை சந்திக்காதீர்கள். எந்த ஒரு மருந்தையும் டாக்டரிடம் ஆலோசனை செய்த பிறகே எடுத்துக் கொள்ளுங்கள்''. ஏனெனில் நமக்கு உயிர் முக்கியம் அல்லவா?