சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் நீட்டித்தது இந்தியா

சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் டிஜிசிஏவால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என டிஜிசிஏ கூறி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி அனைத்து திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களும் தடைசெய்யப்பட்டது. இயல்பு நிலை திரும்பாததால் இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளின் தடையற்ற பயணத்திற்காக இந்தியா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்குகிறது. 

 

தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

 

 

விமான சேவை

 

இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது.

 

இந்த தடை உத்தரவானது, சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் டிஜிசிஏவால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு பொருந்தாது. இருப்பினும், சூழ்நிலைகளின் அடிப்படையில், அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் டிஜிசிஏ கூறி உள்ளது.