புதிய உச்சத்தை தொட்டது இந்தியாவின் கொவிட் நிலவரம்!

புதிய உச்சத்தை தொட்டது இந்தியாவின் கொவிட் நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மொத்த தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் 18 மில்லியன் என்ற மைல்கல்லை பதிவுசெய்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் பிராணவாயு உற்பத்தி உபகரணங்கள் என பல்வேறு மனிதாபிமான உதவிகளை உலக நாடுகள் இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றன.

உலகில் மிகவும் மோசமான கொரோனா தொற்று நெருக்கடியை இந்தியா எதிர்நோக்கியுள்ள நிலையில், தலைநகர் புதுடில்லியில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்து வருகின்ற துயர நிலை பதிவாகி வருகின்றது.

இவ்வாறு உயிரிழப்போரை தகனம் செய்யும் நடவடிக்கை இடைவிடாது தொடரும் நிலையில், இன்றும் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அந்த வகையில் இன்று மேலும் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 257 பேர் புதிததாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், மொத்த தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 18 தசம் 38 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.

3 ஆயிரத்து 645 ஆக உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 832 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.