வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் மனதில் ஏற்படும் சஞ்சலம்

வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள்.

‘குழந்தைகள் என்றாலே துறுதுறுவென வலம் வருவார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார்கள்’ என்பது பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டமாக அமைந்திருக்கிறது. பெற்றோர்களும் அத்தகைய மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மனதிலும் குழப்பமான சிந்தனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் கவலைகள் அவர்களை சஞ்சலத்தில் ஆழ்த்திவிடும். அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

தேவையற்ற பயம் மனதை ஆட்கொள்ளும்போது அவர்கள் பலவீனமடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனதில் எப்படிப்பட்ட பயம் ஆட்கொள்ளும் என்பதை தெரிந்துகொண்டு அதை போக்குவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் பயமும், குழப்பமும் அவர் களின் மனநிலையை சிதைத்துவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மனநிலைக்கு மாறிப்போய்விடுவார்கள். அப்போது தனிமையை விரும்புவார்கள். தனிமை உணர்வும் அவர்களை வாட்டிவிடும்.

 


குழந்தைகள் அம்மா-அப்பாவிடம் மட்டும்தான் பாதுகாப்பான சூழலை உணருவார்கள். புது இடம், புது மனிதர்களை சந்திக்கும்போது அவர்களிடத்தில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். அறிமுகமில்லாத இடத்தில் விட்டுச் செல்வதும் அவர்களை தனிமையில் துவள வைத்துவிடும். ‘அம்மா - அப்பா இன்னும் வரவில்லையே. வரும் வழியில் என்ன ஆனதோ என்று தெரியவில்லையே’ என்றெல்லாம் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். வெளியில் சொல்ல முடியாத ஒருவித கலக்கம் அவர்கள் மனதில் ஏற்படும். இத்தகைய திகில் உணர்வு குழந்தை களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். சுவாசப் பிரச்சினையும் தோன்றும். இத்தகைய திகில் உணர்வு குழந்தைகள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள். அவ்வப்போது காலி அறையை சுற்றிக்காட்டி, ‘அங்கு யாரும் இல்லை’ என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாளடைவில் பயம் நீங்கும்.

புதிய இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும். அங்கு இருக்கும் அறிமுகமற்றவர்களை பற்றியும் தெரிந்தவர்களை பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் தங்களுடைய கற்பனை சக்திக்கேற்ப குழப்பமாக புரிந்து கொள்வார்கள். புதிய மனிதர்களிடம் பேசவும், நெருங்கவும் அஞ்சுவார்கள். இந்த பயம் அவர்களுடைய ஜீரண சக்தியை பாதிக்கும். அதனால் உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். மன நலமும் பாதிக்கப்படும்.

நாம் பேசுவது நமக்கு நியாயமான விஷயமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. வீட்டில் எப்போதும் பிரச்சினை, கடுமையான வாதம், விவாதம் நடந்து கொண்டிருந்தால் அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். விவாதம் முடிந்த பிறகும் அந்த விஷயங்கள் பற்றிய சிந்தனையே குழந்தைகள் மனதில் பல மணி நேரமாக நீடித்துக்கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து பயங்கர காட்சிகளும் அவர்களது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அது தொடர்ந்து நீடிக்கும்போது ஒருவித குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் முரட்டு தனமாக நடந்துகொள்ளும்போது மனதில் ஒருவித பாதுகாப்பின்மை தோன்றும். அது ஒருவித பயத்தை ஏற்படுத்தி குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இந்த நிலை நீடித்தால் படிப்பில் கவனம் குறையும். மந்தநிலை ஏற்படும். பள்ளிச் செல்ல விருப்பம் குறையும். அதனால் பள்ளியில் நடக்கும் விஷயங்கள் பற்றி குழந்தை களிடம் அடிக்கடி கேட்டு விவாதிக்க வேண்டும்.

அதிகப்படியான கூட்டத்தைப் பார்க்கும்போதும் குழந்தை களுக்கு ஒருவித பயம் ஏற்படும். அந்த கூட்டத்திற்கு மத்தியில், ‘நாம் காணாமல் போய்விடுவோமோ’ என்று கவலைகொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் விதத்தில் பெற்றோர் பேச வேண்டும். வீட்டு முகவரி, தொலைபேசி எண், அம்மா, அப்பா பெயர் போன்ற முக்கியமானவற்றை அடிக்கடி சொல்ல வைத்து அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். ‘ஒருவேளை தொலைந்து போய்விட்டால் பயப்படாதே. அதே இடத்தில் நின்று விடு. எங்களைத் தேடி வராதே. நாங்கள் திரும்ப வந்து அழைத்துச் செல்வோம். வெகுநேரமாகிவிட்டால் அங்கு நிற்பவர்களிடம் எங்களது பெயர், செல்போன் எண்ணை கொடுத்து பேசு’ என்று கூறி தைரியப்படுத்த வேண்டும். திரளான கூட்டம், புதுப்புது முகங்கள், குழந்தைகளை பலவாறு சிந்திக்க வைத்து அவர்களை குழப்பிவிடும் என்பதை பெற்றோர் எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

சில சமயங்களில் குழந்தைகளால், ‘தாங்கள் இதற்காகத்தான் பயப்படுகிறோம்’ என்பதை விளக்கிச் சொல்ல முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் அவர்களிடம் பக்குவமாக பேசி, கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை சொல்ல வைத்து பயத்தை போக்க வேண்டும். வேண்டாத கனவுகள் கூட அவர்களை மிரள வைக்கும். ‘உண்மையில் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடுமோ’ என்று பயந்துபோவார்கள். சினிமா, தொலைக்காட்சி சம்பவங்களை உண்மை என்றே நினைத்து கலவரமடைவார்கள். அந்த வயதில் எது உண்மை? எது பொய்? என்பதை பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருக்காது. குறிப்பாக எந்த விஷயம் அவர்களை பயமுறுத்துகிறது என்பதை அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களை பயமுறுத்தும். பெற்றோர்தான் பக்குவமாக புரியவைத்து பயத்தை போக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை. அந்த கதைகளுக்கு சுவாரசியம் சேர்ப்பதற்காக சில பொய்களை சேர்க்க வேண்டி இருக்கும். அதுவே அவர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துவிடும். அதில் வரும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே நம்பி விடுவார்கள். அவ்வப்போது கட்டுக்கதை, நிஜவாழ்க்கை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.கட்டுக்கதைகள் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு அல்ல. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக அவர்களுக்கு புரியவைப்பதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் குழந்தைகளோ, ‘நரி பேசும், காக்கா பாடும்’ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் நிஜத்தைப் புரியவைக்க வேண்டும்.

குழப்பமான மனநிலை குழந்தைகளை பலவீனப்படுத்திவிடும். அவர்களுடைய செயல்பாடுகளும் குறைந்து போகும். சோர்வான மனநிலையில், முகவாட்டத்துடன் காணப்படுவார்கள். அது அவர்களுடைய உடல் நலனையும் பாதிக்கும். அவ்வப்போது அவர்களிடம் பேசி தேவையற்ற குழப்பங்களை போக்க வேண்டும். பாசமாக வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு புதிதாக சகோதரனோ, சகோதரியோ பிறக்கும்போது அவர்கள் மீதுதான் பெற்றோரின் கவனம் அதிகம் பதியும். அப்போது ‘நம்மீது முன்பு போல் பாசம் காண்பிக்காமல் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்படும். ‘இனி நாம் இவர்களுக்கு தேவை இல்லையோ’ என்று கூட சில குழந்தைகள் சிந்திக்கும். அதற்கு இடம் கொடுக்காதவாறு அவர்களின் சந்தேகங்களையும், பயங்களையும் போக்க வேண்டும். அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அப்போது அவர்கள் மனதில் இருக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் மனதில் ஒருபோதும் தேவையற்ற பயமோ, குழப்பங்களோ இருக்கக்கூடாது.