
தூத்துக்குடி-ஸ்டெர்லைட் ஆலையை பிராண வாயு உற்பத்திக்காக திறப்பதற்கு இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை பிராண வாயு உற்பத்திக்காக திறப்பதற்கு அனுமதிப்பதாக இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் பிராணவாயுவை உற்பத்தி செய்துதர தயார் என, தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், உயர்நீதிமன்றில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், பிராணவாயுவுக்கான அவசியப்பாடு உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் பணித்திருந்தது.
இதையடுத்து, சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றைய நாளில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை பிராணவாயு உற்பத்திக்காக மாத்திரம் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணை, உயர்நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது, மனுத்தாக்கல் செய்த ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் பிராண வாயுவை தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதேநேரம், மனுத்தாக்கல் செய்திருந்த தமிழக அரசு, இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்தப் பணிகளும் இடம்பெறக்கூடாது என்றும், உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் வழங்க வேண்டும் என தமிழக அரசினால் கோரப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஆயம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை பிராணவாயு உற்பத்திக்காக திறப்பதற்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.
இதேநேரம், உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவை, மத்திய களஞ்சியத்துக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க இயலாது என்றும் நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்குத் தேவையான பிராண வாயுவின் அளவை மத்திய அரசே தீர்மானிக்கும் என்றும், மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசே அதனைப் பகிர்ந்தளிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது