
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை தீவிரமாக அமல்படுத்துங்கள் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக உள்ள நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 25-ந் தேதி ஒரு உத்தரவு வெளியிட்டது. நோய் கட்டுப்பாட்டு விதிகளை உள்ளூர் மட்டத்திலும், தீவிரமாகவும் அமல்படுத்துமாறு கூறியிருந்தது.
இதை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். மக்களுக்கும் தெரியும் வகையில் நன்கு விளம்பரப்படுத்த வேண்டும்.
நாட்டின் சில பகுதிகளில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உங்களுக்கு தெரியும். அத்தகைய மாவட்ட, நகர, தெரு பகுதிகளில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
உள்ளூர் மட்டத்தில் அவ்வப்போவது நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட, உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.