இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 21.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.

 

 

நேற்று ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது. 

 

தடுப்பூசி போடும் பணி

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 21,57,538 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 13,01,19,310 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 27,10,53,392 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16,39,357 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.