வடமாநிலங்களில் குவியும் சடலங்களால் சாலையோரத்தில் தகனம் செய்யும் அவலம்

வடமாநிலங்களில் குவியும் சடலங்களால் சாலையோரத்தில் தகனம் செய்யும் அவலம்

கொரோனா இரண்டாவது அலையில் தினசரி பாதிப்புடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பல மாநிலங்களில் இடுகாடுகளில் உடல்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத சூழல் காணப்படுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், மிக மோசமான நிலை காணப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில், இடுகாட்டிற்கு வெளியே பிணங்களை பாடையில் வைத்துக் கொண்டு, உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் வீடியோ, கண்களை கலங்க வைக்கிறது.

சில இடங்களில் பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்படுவதை மறைக்க, அரசு தரப்பு இடுகாட்டை சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளது. மேலும், காசியாபாத்தில் இடுகாட்டில் இடம் கிடைக்காததால், நடைபாதையின் ஓரங்களிலேயே பிணங்களை எரிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.

டெல்லியில், பல இடுகாடுகளில் 24 மணி நேரமும் பிணங்கள் எரிக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக இடுகாடுகளை விரிவுபடுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில், அரசு தரப்பில் ஒற்றை இலக்குகளிலேயே கொரோனா உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 15ம் தேதியன்று மட்டும் 88 உடல்கள் அங்குள்ள விஷ்ராம் கட் இடுகாட்டில் எரிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. போபால் விஷவாயு கசிவிற்கு பிறகு, ஒரே நாளில் இத்தனை உடல்கள் எரிக்கப்படுவதை தற்போது காண்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் சூரத், அகமதாபாத், வதோத்ரா மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களிலும் அதிகளவில் பிணங்கள் எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், குறிப்பிட்ட மாநில அரசுகள் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்குவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி இல்லாததே, அதிகப்படியான கொரோனா உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், உண்மை நிலையை வெளிப்படுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது