
விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை!
மியன்மாரால் விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் அவர்கள் நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மியன்மார் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் அறிவித்திருந்தார்.
அந்த நாட்டு கடற்படையால் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் பின்னர் தடுத்து வைக்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் இரண்டு படகுகளில் 12 மீனவர்கள் சிலாபம் - மாரவில மற்றும் திருகோணமலை பகுதிகளில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றிருந்தனர்.
பின்னர் சீரற்ற காலநிலை காரணமாக மியன்மார் கடற்பரப்பிற்குள் சென்றிருந்த மீனவர்களை அந்த நாட்டு கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 1ம் திகதி மியன்மார் ஆட்சியினை அந்த நாட்டு இராணுவத்தினர் கைப்பற்றியிருந்த நிலையில், மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
அத்துடன், மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் இடையில் அதிக தூரம் காரணமாக அவர்களின் நிலையை அறிவதில் சவால் ஏற்பட்டிருந்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் நளிந்த டி சில்வா முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்