தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்கிடையே, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

 

 

 கொரோனா பரிசோதனை

 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை வருகிறார். தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த ஆலோசனைக்கு பின் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.