எப்போதும் நெஞ்சில் நிழலாடும் விவேக்கின் காமெடி கலாட்டாக்கள்

நடிகர் விவேக் நடித்துள்ள பல்வேறு காமெடி காட்சிகள் எப்போதும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

திடீரென மரணமடைந்த விவேக்கின் காமெடி காட்சிகளை நினைத்து பார்த்தாலே அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வருகிறது. அந்த அளவுக்கு தான் நடித்துள்ள படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை உணர்வை விவேக் வெளிப்படுத்தி இருப்பார்.

‘குரு என் ஆளு’ என்ற படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கும் விவேக் எஸ்.எம்.பாஸ்கர் விரும்பும் பெண்ணாக வருவார். விவேக் போட்டிருப்பது பெண் வேடம் என்று தெரியாமல் எஸ்.எம்.பாஸ்கர் அவரை உருகி உருகி காதலிப்பார்.

விவேக் கேட்டதையெல்லாம் எஸ்.எம்.பாஸ்கர் வாங்கிக் கொடுப்பார். அப்போது ஒரு காட்சியில் சரோஜா தேவி போல விவேக் பேசியிருப்பார். ‘கோபால்... கோபால்...’ என்று சிவாஜி கணேசனிடம் சரோஜா தேவி பேசிய வசனத்தை அப்படியே அச்சு பிசகாமல் பேசி விவேக் நடித்திருப்பார்.

அந்த காட்சி எப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையிலே அமைந்திருக்கும்.

ரன் படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் அனைத்துமே குபீர் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும். நண்பன் மாதவனை தேடி சென்னைக்கு சென்று, கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டு சுற்றி திரியும் இளைஞராக விவேக் அந்த படத்தில் நடித்திருப்பார்.

தனக்கு தந்தையாக நடித்திருப்பவர், தான் படுத்திருக்கும் படுக்கையில் அருகில் வந்து படுப்பார். 2 கைகளையும் விரித்து அவர் தூங்கும் நேரத்தில்... ஏதோ எலி செத்த நாத்தம் அடிக்குதே... அப்பு கப்பு தாங்கல என்று கூறுவார். இந்த காட்சியும் எப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

தனுஷ் நடித்துள்ள படிக்காதவன் படத்தில் அசால்ட் ஆறுமுகம் என்கிற ‘தாதா’ வேடத்தில் நடித்திருப்பார். தனுஷின் காதலுக்கு விவேக் உதவி செய்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அசால்டு களத்தில எறங்கிட்டான் என்று அவர் பேசும் வசனம் இப்போதும் பிரபலம்.

படிக்காதவன் படத்தில் விவேக்கின் கெட்டப்பும் பேசப்படும் வகையில் இருந்தது.

சூர்யாவின் சிங்கம் படத்தில் ஏட்டாக நடித்திருக்கும் விவேக்கின் பெயர் எரிமலையாகும். குற்றவாளிகளை பிடிக்க செல்லும் காட்சிகளில் அவர்களிடம் விவேக் சின்னா பின்னமாகும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அப்போது பின்னணியில் ‘எரிமலை எப்படி பொறுக்கும்....’ என்ற பாடல் ஒலிக்கும்.

இதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள காட்சியாகும்.

விவேக்

பார்த்திபன் கனவு படத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே வெட்டியாக இருக்கும் கணவன் வேடத்தில் கலக்கியிருப்பார். அதில் ஒரு காட்சியில் முதல் மரியாதை சிவாஜி பேசும் வசனமான ‘அடி கிறுக்கு பய புள்ள...’ என்கிற வசனத்தை அப்படியே பேசி நடித்திருப்பார்.

சுந்தர்.சி. நடித்துள்ள வாடா படத்தில் சுருளிராஜன் கெட்டப்பில் விவேக் நடித்திருப்பார். அப்படியே அவரைப் போன்றே பேசி விவேக் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

உத்தம புத்திரன் படத்தில் ‘எமோஷ்னல் ஏகாம்பரம்’ என்கிற வேடத்திலும் விவேக் விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார்.

பாளையத்து அம்மன் படத்தில் பராசக்தி சிவாஜி பேசிய நீதிமன்ற வசனத்தை அப்படியே மாற்றி பேசி இருப்பார்.

திருநெல்வேலி படத்தில் விவேக் பேசிய ‘ஆயிரம் பெரியார் வந்தாலும், உங்களை திருத்த முடியாது’ என்கிற வசனமும், அந்நியன் படத்தில் ‘சாரி’ என்ற போலீஸ்காரர் வேடத்தில் பிரகாஷ்ராஜூடன் வந்து ‘கும்பி பாகம்’ பற்றி பேசும் வசனமும் பிரபலம்.

அந்நியன் படத்தில் விக்ரமை பார்த்து ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தை எழுதிய வைரமுத்து போல’ நடப்பதாக விவேக் கூறுவார். இப்படி விவேக் நடித்துள்ள பல்வேறு காமெடி காட்சிகள் எப்போதும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.