கீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன!
சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் 6-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு எடைக்கல்லும் முறையே 8, 18, 150, 300 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில், கடந்த மே 20-ஆம் திகதி முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில், மணலூரில் சுடுமண்ணாலான உலை, கீழடியில் விலங்கின் எலும்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்பு, அகரத்தில் மண்பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், தமிழாா்வலா்கள் மத்தியில் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு மீது மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஜூன் மாதம் அகரத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னா், கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், கீழடியில் ஏற்கெனவே இரு மண்பானைகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், தண்ணீரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்காக இதுபோன்று வடிகால் வசதியை ஏற்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.