அடமும் சண்டையும் போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும். குழந்தைகளின் சண்டை, அடம் தற்காலிகமானதுதான். ஆனால், அதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம். அதுபோல் ‘அது வேண்டும் இது வேண்டும்’ எனச் சொல்லி அடம் பிடிப்பதும் சகஜம்.
ஏன் குழந்தைகளுக்குள் சண்டை வருகிறது?
 

 

அடமும் சண்டையும் போட்டும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

குழந்தையின் இந்தக் குணங்களுக்கு பின்னால் காரணங்கள் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள். குழந்தைகளை அடிப்பதோ மனம் நோகும்படி திட்டுவதோ கூடாது. குழந்தைகளை தனியாக கூட்டி சென்று பக்குவமாக மென்மையாக பேசி புரிய வைப்பது அவசியம். குழந்தைகளை கவனிப்பில்லாமல் அப்படியே விட்டுவிடுவது பெரும் தவறு. குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.

வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும். சண்டை போட்டாலும் அடம் பிடித்தால் நல்ல குழந்தைக்கு அழகல்ல எனச் சொல்லி புரிய வைக்கலாம். சண்டை போட்டாலும் அடம் பிடித்தாலும் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும். ஆனால், விட்டுக்கொடுத்தோ சமூக நட்புடன் நடந்துகொண்டாலோ அலாதியான இன்பம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள். கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம்.

ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர். எப்போதும் பெரியவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையிடமும் சண்டையிடும் குழந்தையிடமும் அவர்களின் முழுமையான பேச்சை கேட்ட பின் பதில் சொல்லலாம். பெற்றோர் இவர்களுக்கு பதில் சொல்லும் முன் குழந்தைகளின் உணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அடமும் சண்டையும் போடும் குழந்தைகள்

குழந்தைகளின் பேச்சை கேட்ட பின்பு, பெரியவர்கள் ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்க கூடாது. இதனால் வெறுப்பும் தோல்வி மனப்பான்மையும் வந்துவிடும். இது வேண்டும் என அடம் பிடித்து சண்டை போட்டாலோ வேறு காரணங்களுக்காக சண்டை போட்டாலோ பெற்றோர் இரண்டு முடிவுகளைச் சொல்லி அதில் ஒன்றை குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் சமாதானம் அடைவார்கள்.

அதே சமயம் தன்னை கவனிக்கவில்லை தனக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை போன்ற எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும். ஒருவரை அடிப்பது, அடித்து காயப்படுத்துவது குற்றம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மனதிலும் உடலிலும் காயங்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். பெரியோர், சிறியோர் என அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்ட குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். உணவு ஊட்டுவது போல குளிப்பாட்டுவது போல அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது.

அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் தற்போதைக்கு இந்த விஷயம் கிடைக்காது. ஏனெனில் இந்தக் காரணத்தால் என எடுத்து சொல்லுங்கள். அடம் பிடித்தார்கள் என்றால் உன்னிடம் இவ்வளவு பொம்மைகள் உள்ளன. மற்ற குழந்தைகளிடம் இவ்வளவு கிடையாது. இது உனக்கு கிடைத்த நல்ல விஷயம் என நேர்மறை கருத்துகளை சொல்லி புரிய வைக்கலாம். குழந்தைகள் திருப்தி அடைவர். சண்டையை எப்போது தீவிரமாக்காமல் இருக்க பெற்றோர் தலையிடுவது முக்கியம்.

புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்திவிட்டால் பிரச்னைக்கு இடமில்லை. அடம் பிடிப்பதை வாங்கி தர வாய்ப்பு, வசதி வரும். அப்போது வாங்கி தருகிறேன் என எடுத்து சொல்லலாம். பக்கத்து வீட்டு குழந்தையுடன் தன் குழந்தை சண்டை போடுவதை சில பெற்றோர் தீவிரமாக்கி விடுகின்றனர். சமூக நட்பை குழந்தையிலே வளர்த்தால்தான் பெரியவர் ஆனதும் சமூகத்துடன் வாழ குழந்தைகளால் முடியும்.