
73 வயதில் பெண் தேடும் முதியவர்.. அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? மறுமணத்திற்கான சோக பின்னணி!
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் தனிமையில் தற்போது வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மறுமணம் செய்ய முடிவு செய்து அதற்கான விளம்பரத்தையும் கொடுத்துள்ளார். விருப்பமுள்ள 73 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண் மகன் தன்னை தொடர்பு கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளார்.
இதற்காக அவர் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அதில், அந்த நபர் 73 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அந்த நபரும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து மறுமணத்திற்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ''எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்து விட்டது.
மேலும், எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் எனது பெற்றோரிடம் வசித்து வந்தேன். நான் நன்றாகப் படித்ததால் எனக்கு அரசு வேலையும் கிடைத்தது.
எனது பெற்றோரை நான் நன்றாகக் கவனித்துக் கொண்டேன். ஆசை ஆசையாகச் சொந்த வீடு ஒன்றும் வாங்கினேன்.
ஆனால், தற்போது எனது பெற்றோர் உயிருடன் இல்லை. நான் ஆசை ஆசையாக வாங்கிய அந்த பெரிய வீட்டில் தற்போது தனிமையில் தான் இருக்கிறேன்.
தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதன் காரணமாகவே நான் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
மேலும், பலரும் இந்த வயதில் உனக்குத் திருமணம் வேண்டுமா எனக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு துணை இல்லாமல் தனிமையில் இருப்பது மிகப்பெரிய தண்டனை என உருக்கமாக காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இத் திருமண விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலர் கிண்டலாகப் பதிவிட்டு வந்த நிலையில், மரணத்தை விடத் தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை.
எனவே, அந்த மூதாட்டியின் உணர்வைக் கொச்சைப் படுத்தாதீர்கள் எனப் பலரும் ஆதரவாக கோரிக்கை விடுத்துள்ளனர்.