உலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் ஸ்ரீலங்காவின் நிலை!

உலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் ஸ்ரீலங்காவின் நிலை!

உலக வங்கியின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழ் மத்திய வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னர் உலக வங்கி இலங்கையை கீழ் மத்திய தர வருமானம் பெறும் நாடு என வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் இந்த தரப்படுத்தல் வருடாந்தம் ஜூலை முதலாம் திகதி புதுப்பிக்கப்படும். பல்வேறு நாடுகளின் வருமானங்களுக்கு அமைய அந்நாடுகள் தரப்படுத்தப்படும். இதனடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேறு தரப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த வருமானத்தை நோக்கி செல்லும் மூன்று நாடுகளில் இலங்கையும் இருப்பது முக்கியமானது. இலங்கையுடன் அல்ஜீரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் மாத்திரமே உள்ளன. கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த தேசிய தனிநபர் வருமானம் 4 ஆயிரத்து 60 டொலர்களாக இருந்ததுடன் இந்த ஆண்டு அது 4 ஆயிரத்து 20 டொலர்களாக குறைந்துள்ளது.

உலக வங்கி, ஆயிரத்து 36 டொலருக்கும் குறைந்த தனிநபர் வருமானங்களை கொண்டுள்ள நாடுகளை கீழ் மட்ட வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்துகிறது. ஆயிரத்து 36 டொலர் முதல் 4 ஆயிரத்து 45 டொலர் தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளை கீழ் மத்திய வருமானம் கொண்ட நாடுகளாக வகைப்படுத்துகிறது.

4 ஆயிரத்து 46 டொலர் முதல் 12 ஆயிரத்து 535 டொலர் தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளையே உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகளாக உலக வங்கி வகைப்படுத்துகிறது. 12 ஆயிரத்து 535 டொலர்களுக்கு மேல் தனி நபர் வருமானங்களை கொண்டுள்ள நாடுகள் உயர் வருமானம் கொண்ட நாடுகளாக கருதப்படுகிறது.