
மது அருந்தும் வயது வரம்பு 21 ஆக குறைப்பு - டெல்லி அரசு நடவடிக்கை
மதுபானம் அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக டெல்லி அரசு குறைத்துள்ளது.
புதிய கலால்வரி கொள்கைக்கு டெல்லி மந்திரிசபை ஒப்புதல் அளித்ததை நேற்று அறிவித்த துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, இத்தகவலை தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் 60 சதவீத மதுபானக் கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபானக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் சிசோடியா கூறினார்.
தலைநகரில் பரவலாக மதுபானக் கடைகள் அமைந்திருக்கும்படி அரசு பார்த்துக்கொண்டிருப்பதால், சமூகவிரோதிகள் இத்தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், கல்வி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் என்று பல துறைகளில் சமூகவிரோதிகள் ராஜ்ஜியத்தை ஒழித்துள்ள டெல்லி அரசு, மதுபானக் கடைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.