
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்காக அவர்கள் அந்த பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
அந்தவகையில் சிங்கு எல்லையில் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ பின்னர் கூடாரம் முழுதும் பரவியது. சம்பவத்தின் போது அங்கே சுமார் 12 பேர் இருந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடினர்.
அவர்களால் முடியாததால் பின்னர் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் கூடாரம் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் 5 செல்போன்கள், 20 நாற்காலிகள், 20 மெத்தைகள் மற்றும் உணவு பொருட்களும் எரிந்து நாசமாயின.
மேலும் தீயை அணைக்க போராடியதில் விவசாயி ஒருவரும் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தகவல்களை விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.