குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் பங்களிப்பு

நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் அல்லது குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளர உதவியாக அமையும்,

குழந்தைகளை பரிவோடு பார்த்து பார்த்து வளர்ப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. தாயின் அன்பு கிடைக்காத குழந்தைகள் முழுமையடைவதில்லை. பேசக்கூட தெரியாத குழந்தையின் அழுகுரலில் எது பசி எது வலி என்பதை ஒரு பிரியமுள்ள தாய் உடனடியாக உணர்கிறாள். இது அவளுக்கு மட்டுமே கிடைத்த தனிப்பட்ட சக்தி.

ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை கொண்டுள்ள நல்ல குணங்களை பாராட்டுங்கள். தவறு செய்கையில் அது தவறு என்பதை அதன் மொழியில் புரிய வையுங்கள்.

 


குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் அறிந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. கண்டிப்பு என்பது அதற்கு புரியும் வகையில் கண்டிக்க வேண்டும். அம்மா ஏன் நம்மோடு பேசவில்லை என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.

முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விடக்கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது, அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.

குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.

மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்காவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும்.

குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.

மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.