பிள்ளைகளின் மொழியியல் படிப்பும், வேலைவாய்ப்பும்

மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது.

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சர்வதேச அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான துறைதான் மொழியியல். மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது. இது ஒரு தனித்த மொழியைப் பற்றி மட்டும் படிப்பதல்ல. மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகள் குறித்தும் கற்பதாகும்.

மொழிகளின் ஒலி, வடிவம், பொருள், செயல்பாடு குறித்து பயில்வது. இந்தத் துறை மொழியை ஆய்வு செய்து விளக்குகிறது. மொழி குறித்த அறிவியல் ரீதியான கல்வி பெறுபவரையே மொழியியலாளர் (linguists) என்கிறோம். இவர்கள் மொழிகளின் அனைத்து வகைகளிலும், உலகின் அனைத்து மொழிகளிலும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பர். சமூக அமைப்பு, புவி மண்டலம், வரலாற்று காலம், மொழிக்கும் மனதுக்கும் உள்ள உறவு உள்ளிட்ட பல கருத்துக்களில் மொழியியலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.

 


மொழியியல் கல்வி 3 முக்கியப் பிரிவுகளை கொண்டது. அவை: சின்க்ரோனிக் மற்றும் டயாக்ரோனிக், தியரிட்டிகல் மற்றும் அப்லைட், கன்டெக்சுவல் மற்றும் இண்டிபென்டன்ட். இதில், சின்க்ரோனிக் என்பது மொழியின் தற்போதைய நிலை குறித்தும், டயாக்ரோனிக் என்பது மொழிகளின் வரலாறு, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் படிப்பதாகும். தியரிட்டிகல் என்பது ஒரு மொழி குறித்த விளக்கத்திற்கான வரம்புகளையும், அதன் உலகளாவிய கோட்பாடுகளையும் உருவாக்குவது.

`அப்லைட்' என்பது மொழியின் செயல்பாடு மற்றும் உரையாடல் குறித்த கல்வியாகும். இது வெறுமனே கோட்பாட்டு மொழியியல் பயன்பாடாக மட்டும் இல்லாமல், அந்த மொழிக்கான ஒழுங் கமைப்பு மற்றும் தத்துவங்களைக் கொண்டதாக இருக்கும்.

``கன்டெக்சுவல்'' என்பது ஒரு மொழி எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உணரப்படுகிறது, அதன் செயல்பாடுகளால் அது உலகோடு எவ்வாறு ஒன்றிப் போகிறது என்பதை விளக்குவது. இண்டிபென்டன்ட் என்பது ஒரு மொழி தொடர்பான புறநிலைகள் இல்லாமல், சொந்த நலனை மட்டுமே அந்த மொழி கொண்டிருப்பதாகும்.

மொழியியல் கோட்பாட்டில், மொழியின் வேறுபட்ட ஒலிகள், அடிப்படை ஒலிமுறை, வார்த்தை வடிவம், வாக்கியங்களில் வார்த்தைகளின் ஒருங்கமைப்பு, வார்த்தை களின் பொருள், உச்சரிப்பு, மொழியின் நளினம் ஆகியவை இடம்பெறும். பயன்பாட்டு மொழியியல் மொழி கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், பேச்சு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

மருத்துவ அறிவியலில், உளவியல் மற்றும் நரம்பியலுடன் மொழியியல் தொடர்புடையதாக உள்ளது. எனவே, மொழியியல் கற்பது, கல்வி, பதிப்பகம், ஊடகம், சமூக சேவை, தகவல் தொடர்பு, கணினி மொழி, குரல் பகுப்பாய்வு, பேச்சுக் கோளாறு மற்றும் மொழி தொடர்பான அனைத்து பணியிடங்களிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகங்களில் அயல்மொழி பாடங்கள், பயிற்சிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருவதால், மொழியியல் படிப்பவர்களுக்கு கல்வித் துறை மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். பல்வேறு அரசு முகமைகள் மொழி பயிற்சித் திட்டங்களை மேற் பார்வையிட மொழியியலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. குழந்தைகளுக்கான மொழியியல் குறைபாடுகளை மதிப்பிடுவது, சரி செய்வது, மேம்படுத்துவதில் மொழியியலாளர்களின் பங்களிப்புக்கான தேவை வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.