கராச்சி பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா – இம்ரான் கான்

கராச்சி பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா – இம்ரான் கான்

கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்த நாடாளுமன்றில் உரையாற்றிய இம்ரான் கான், “மும்பையில் என்ன நடந்ததோ அது பாகிஸ்தானிலும் நடக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது.

நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் தகவல் தெரிவித்தேன்.

நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். சதியை முறியடித்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில் சண்ட்ரிகர் வீதியில் அமைந்துள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் ஜூன் 29ம் திகதி பயங்கரவாதிகள் நான்கு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் காயமடைந்தனர்.

அதன் பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக ஏற்கனவே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெக்மூத் குரேஷி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.