குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
இன்றைய தலைமுறை குழந்தைகள் வெளி உலக தொடர்புகளை குறைத்துக்கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற இணைய உலக வலைப்பக்கங்களுக்குள் மூழ்கி கிடக்கிறார்கள். கணினி யுகத்திற்கேற்ப தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டாலும் சக மனிதர்களை அணுகும் விதம் சார்ந்த தகவல் தொடர்பு திறனில் பின்தங்கி இருக்கிறார்கள். நெருங்கிய உறவினர்களிடம் பேசுவதற்குகூட தடுமாறுகிறார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் மனம் நோகும்படியான வார்த்தைகளையும் உச்சரித்து விடுகிறார்கள்.
குழந்தைகள் டிஜிட்டல் திரைகளில் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. மரியாதை கேடான அணுகுமுறை, தேவையற்ற சொற்களை பயன்படுத்துதல், மோசமான வார்த்தைகளை உச்சரித்தல், தடித்த வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற செயல்பாடுகளால் பெற்றோரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்.
குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
குழந்தைகளிடம் மரியாதையான தகவல் தொடர்பு திறனை வளர்க்க பெற்றோர் செய்யவேண்டிவை:
குழந்தைகள் வளரவளர நல்ல விஷயங்களையும் சுயமாக கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்தால் அவர்களின் குணாதிசயம் மாறிப்போய்விடும். பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனில்தான் நேரத்தை செலவளிக்கிறார்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அதற்கு பெற்றோர்தான் காரணம். குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவதன் மூலம் அவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தலாம். பெற்றோர் பேசும் வார்த்தைகளை உள்வாங்கித்தான் குழந்தைகள் மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும்? அவர்களை எப்படி அணுக வேண்டும்? என்பதை பெற்றோர் தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க பழகிக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பதை விட நண்பராக இருப்பதுதான் சிறந்தது. அதன் மூலம் தகவல் தொடர்பை எளிமைப்படுத்தி விடலாம். புதிய சொற்களை கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்றவிதத்தில் சொல்லகராதியை பின்பற்ற வைக்கலாம். குழந்தைகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் கண்டிப்பு காட்டி புரிய வைக்கலாம். எது தவறு? எது சரியானது? என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் வேலை. தங்களை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் மரியாதையோடுதான் பேச வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர் விளங்க வேண்டும். பேச்சில் தெளிவு, வார்த்தைகளில் கண்ணியம், மற்றவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் பாங்கு, மரியாதையான அணுகுமுறை உள்ளிட்ட நேர்மறையான தகவல் தொடர்புகளை பெற்றோர் நடைமுறைப்படுத்தவேண்டும். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்.
குழந்தைகளின் நடத்தையில் குறைபாடு இருந்தால் அதனை தவறாமல் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளின் பேச்சுக்கள் மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். இனி அதுபோல் ஏன் பேசக்கூடாது என்பதையும் அவர்களுக்கு புரியவையுங்கள். எளிமையாக அவர்கள் புரிந்துகொள்ள தக்கவகையில் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.
குழந்தைகள் தகாத வார்த்தைகளை பேசினால் கடுமை காட்டக்கூடாது. அந்த வார்த்தைகள் எந்த அளவிற்கு மோசமானவை என்பதை புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் மறுபடியும் அதுபோன்ற வார்த்தைகளை உச்சரிக்க மாட்டார்கள்.
குழந்தைகள் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ளும் வரை கடுமையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசினால் கண்டிக்க தவறாதீர்கள். ‘உன்னிடம் நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்’ என்று கண்டிப்புடன் கூறுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளும்போது அவர்களை பாராட்டுங்கள்.
பெற்றோர்கள் செல்போன்களில் மூழ்கிப்போய்விடக் கூடாது. தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் உரையாடவேண்டும். அவர்களின் விருப்பங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களை மனம் விட்டு பேச அனுமதிப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடத்தில் முறையான தகவல் தொடர்புத் திறன் வளரும்