நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
நாம் எப்போதும் நம்மைவிட புகழிலும், செல்வத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே நமது முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல முன்னேற முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வு களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான, ஜிம்ரோன் (Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் எறும்புகள் தத்துவம் (Ants Philosophy) என்று மூன்று செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார். அவை..
1.முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. இது போல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, விடாதே, விடாதே, விட்டு விடாதே என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.
2.துணிந்து செல்: எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன.கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளைப்போல எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லா விட்டாலும், துன்பம் வரும் நேரத்தில் நல்ல நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
3.நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனிதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறுசுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்சினை என்று எதுவுமில்லை. அதற்கு பிறருக்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.
ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 50 மடங்கு கனமான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்து முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப்பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.