வெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.
வெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
வெளிநாட்டு வேலை என்பது ஒருவருக்கு பிழைப்பு சம்பந்தப்பட்டது. இன்னொருவருக்கு பெருமை சம்பந்தப்பட்டது. படித்து முடித்ததும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருண்டு. நல்ல வாய்ப்புகளினால் இங்கே இருக்கும் பணியை துறந்து செல்வோருமுண்டு. அங்கே பணியிலிருப்பவரை மணந்தால் வெளிநாட்டு வேலை அமையப்பெறும் பெண்களும் உண்டு. இவற்றில் ஏதுமில்லாமல், கல்யாணம், குழந்தை என்று ஆகிவிட்ட பெண்ணிற்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்தால்...? குடும்பம் துறந்து வெளிநாட்டு பணி என்பது எல்லாப்பெண்களாலும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லைதான். கட்டாயம் என்று ஒன்று நேர்கையில் விமானம் ஏறித்தான் ஆ க வேண்டும்.
மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள். பெண் அதுவும் கல்யாணமாகி குழந்தையும் பெற்ற பெண் என்று அவன் மீதான நம்பிக்கை மற்றும் சந்தேக மனப்போக்கு கொண்டுள்ள சமூகம், எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. சுதந்திர மனப்போக்கிற்கு தயாராகாத சமூகத்தை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. பொருளெனும் வாழ்க்கை பொதுநோக்கு என்றாலும் எச்சூழலிலும் பணிக்கு செல்லும் ஆண் குற்றவாளி ஆக்கப்படுவதில்லை.
குடும்பத்தை விட்டு செல்லுதல் என்பது மிகக் கடினமான முடிவு மட்டுமல்லாமல் உணர்ச்சிகளின் அடிமைத்தளைகளை தள்ளிவிட முடியாத சூழலாகவும் இருக்கிறது.
நிலைக்கதவை தாண்டிவிட்டாலும் கழிகளுக்கு இடையில் புள்ளிகளாய் சிக்கிக் தவிக்கும் நிலை நன்கு படித்த சிந்திக்கக்கூடிய மேல் நடுத்தரக்குடும்பப்பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
வெளிநாட்டு பயண வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரியும் பெண்கள் கூட மணமான பின்பறக்கும் தன் கனவுகளை மடிக்கணினிக்குள் மடித்து வைத்துவிடுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் பெண் பயணத்திற்கு இரு தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டன். திருமணத்திற்கு முன் தனிப்பயணம் திருமணத்திற்கு பின் துணையுடன் பயணம். கணவனுடன் அன்றி மனைவியின் தனிப்பணயம் பலவித கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
கணவன் என்ன செய்வார்? குழந்தைகள் தடுமாறும், பாசப்பிணைப்பு அறுந்துபோகும், நேசம் குறைந்து விடும் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளால் தனித்து பயணம் செய்வதை பொறுப்பற்ற ஒரு முடிவாய் கருதி கைவிடச் செய்யும் குழலுக்கு தள்ளிப்படுகிறார்கள். இதனால் வெளிநாட்டில் வந்து பணிபுரியும் மணமான பெண்களின் எண்ணிக்கை மிகசொற்பமாகவே இருக்கிறது.
இந்த சூழல் மாற்றத்திற்கு தேவை பயணிக்க துடிக்கும் பெண்ணின் துணிவும் அசையாத நம்பிக்கையும், குடும்பத்தினரின் ஊக்கமும்.
பொருளை நோக்கிய பயணம் எனினும் திறமைகளை விரிவாக்கம் செய்யவும் மனம் தோய்ந்த நம்பிக்கைகளை மீள் உருவாக்கம் செய்யவும். தனக்கான தேவைகளை தனித்து நோக்கவும். பெண்கள் அதிகம் பயணம் செய்யவேண்டிய அவசியம் உள்ளது.