குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி?

ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.

என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?!

 


இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா?

தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.

ஆனால் இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள்.

இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.

 அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.

பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார்.

நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.

ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.

இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.

வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’

நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா?

என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
“ஏன்?” இது பயிற்சியாளர்.

சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.

இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.

படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம். அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.

நாம் செய்வது சரிதானா? வாழ்வியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.

தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.

நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது.

அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.

நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.

இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.

ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது.

உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.