பண மோசடி வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு...!

பண மோசடி வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு...!

37 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாக கையாண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதிவாதியின் சாட்சியமளிப்பின்றி குற்றமற்றவராக விடுவிக்கப்படுவாரா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்டு, 37 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் முறைப்பாட்டுக்கு அமைய, சாட்சிகளை அழைப்பதை முடிவுக்கு கொண்டுவருவதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை அவதானித்த மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, சாட்சிகளை அழைக்காமல் பிரதிவாதியான மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுவிப்பதா? இல்லையா என்ற தீர்ப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.