இந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகள் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

இந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பட்டியலிட்டார்.

இந்திய-சீன உறவு தொடர்பான இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

 


அவர் பேசியதாவது:-

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள், இந்திய-சீன உறவை பதற்றத்துக்கு உள்ளாக்கி விட்டன.

இந்திய-சீன உறவு உண்மையிலேயே ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளது. எந்த முடிவு எடுத்தாலும், அது உலக அளவில் விளைவுகளை உருவாக்கும்.

கிழக்கு லடாக்கில் சீனாவின் செயல்பாடுகள், படைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை அவமரியாதை செய்வதுடன், அமைதியை சீர்குலைக்கும் விருப்பத்தையும் தெரிவிக்கிறது. இதுவரை படை குவிப்புக்கான நியாயமான விளக்கத்தை சீனா அளிக்கவில்லை.

இந்திய-சீன உறவு சீரடைய வேண்டுமானால், அதற்கு 8 கொள்கைகள் இருக்கின்றன. எல்லை கோடு தொடர்பாக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

எல்லை கோடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அங்குள்ள நிலவரத்தை தன்னிச்சையாக மாற்றி அமைக்க முயற்சிப்பதை முற்றிலும் ஏற்க முடியாது.

ஒவ்வொரு நாட்டுக்கும் விருப்பங்கள், கவலைகள், முன்னுரிமைகள் உள்ளன. அதை மற்ற நாடு பரஸ்பரம் மதிக்க வேண்டும். வளர்ந்து வரும் வல்லரசு என்ற முறையில் ஒரு நாட்டுக்கு இருக்கும் உணர்வுகளை மற்ற நாடு புறக்கணிக்கக்கூடாது.

எல்லையில் அமைதியை பராமரிப்பதுதான், மற்ற துறைகளில் நல்லுறவுக்கான அடிப்படை ஆகும். எனவே, எல்லையில் அமைதி சீர்குலைந்தால், அது மற்றவற்றிலும் எதிரொலிக்கும்.

எல்லையில் உள்ள நிலவரத்தை புறந்தள்ளிவிட்டு, எல்லாவற்றையும் சுமுகமாக கொண்டு செல்லலாம் என்று நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. உறவு முன்னேற வேண்டுமானால், கடந்த 30 ஆண்டுகளில் கற்ற பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.