ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 


ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மிக பிரமாண்டமாக எழில்மிகு தோற்றத்துடன் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி 50 ஆயிரத்து 422 சதுரடி பரப்பளவில் நினைவிடம் அமைக்க முதல்கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற தொடங்கியது.

அவ்வப்போது கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

கட்டுமானப் பணிக்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு மொத்தம் ரூ.79.75 கோடிக்கு நிதியை அரசு ஒதுக்கியது. அதன் பிறகு கட்டுமானப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு ஜெயலலிதா நினைவிட பணிகள் மிக வேகமாக நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில்நுட்பங்களுடன் துபாய் நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்களும் இணைந்து கட்டுமானப் பணிகளை மிக நேர்த்தியாக அமைத்து வந்தனர்.

பீனிக்ஸ் பறவை வடிவமைப்புக் கொண்ட இந்த நினைவிடம் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிட பணிகளுடன் எம்.ஜி.ஆர். நினைவிட புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தன.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. திறப்பு விழாவையொட்டி ஜெயலலிதா நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். நினைவிட வளாகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காலை 11 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியது. இதற்காக நுழைவிட வாயலில் மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் 10.45 மணியளவில் அங்கு வருகை தந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.55 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று நினைவிடத்தை திறந்து வைத்தார்.
 

அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

ஜெயலலிதா நினைவிடத்தில்  மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்


அதன் பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தனர்.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை புனரமைப்பு செய்ததற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தனர்.

பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிட வாயலில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர். அங்கு விழா தொடங்கியது. தலைமை செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் ஆகியோர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை வரவேற்றனர்.

விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். முடிவில் செய்தித்துறை இயக்குனர் பாஸ்கரபாண்டியன் நன்றி கூறினார்.

விழாவில் அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் சத்யா, விருகை ரவி, வேளச்சேரி அசோக், ஆதிராஜா ராம், ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், சோமசுந்தரம்.

அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், ஆர்.எம். டி.ரவீந்திர ஜெயின், நொளம்பூர் இம்மானுவேல், முகப்பேர் இளஞ்செழியன், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தன. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவையொட்டி மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் வந்ததால் அங்கு போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டு இருந்தது.