தங்க சுரங்கத்தில் வெடிவிபத்து : 14 நாட்களுக்கு பிறகு 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கனிம வளங்கள் நிறைந்த சீனாவில் ஏராளமான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

 


இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன. பல சுரங்கங்கள் அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன. இதனால் சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர்.

ஆனாலும் சீன அரசு இதில் கவனம் செலுத்தாததால் சுரங்க விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் சீனாவின் கிழக்கு மாகாணம் ஷாண்டோங்கின் யான்டாய் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10-ந் தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது. இதில் சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் பூமிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

எனவே சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் உயிர் இழந்திருக்க கூடும் என்று கருதப்பட்டது.

இந்த சூழலில் தான் கடந்த 17-ந் தேதி சுரங்கத்தில் இருந்த சிறிய துளை வழியாக மீட்பு குழுவினர் கயிறு ஒன்றை பூமிக்கு அடியில் அனுப்பினர்.

பின்னர் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த கயிற்றை மேலே எடுத்தபோது அதில் சிறிய காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது.

அதில் 2000 அடி ஆழத்தில் 11 தொழிலாளர்களும், அதற்கும் கீழ் 100 அடி ஆழத்தில் ஒரு தொழிலாளரும் சிக்கியிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும் வெடிப்பின்போது தங்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தேவை என்றும், உணவு தேவைப்படுவதாகவும் தொழிலாளர்கள் மீட்புக் குழுவினருக்கு அனுப்பிய அந்த குறிப்பில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் கேட்டபடி மருந்துகள் உணவுகள் உள்ளிட்டவை அந்தத் துளை வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில் 2000 அடி ஆழத்தில் சிக்கி இருந்த 11 தொழிலாளர்களில் படுகாயம் அடைந்த தொழிலாளர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் தங்களின் ஒட்டுமொத்த திறனையும் செலுத்தி மீட்பு பணிகளை மேலும் தீவிரமாக்கினர்.

இதன் பலனாக பூமிக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள் 11 பேரும் விபத்து நடந்த 14 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முதலாவதாக பூமிக்கு அடியில் 2,100 அடி ஆழத்தில் தனியாக சிக்கியிருந்த ஒரு தொழிலாளரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பல நாட்களாக இருட்டில் இருந்த சூழலில் திடீரென வெளிச்சத்தை பார்க்கும்போது அவரது கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அவரது கண்களை கட்டி மீட்புக்குழுவினர் அழைத்து வந்தனர். இதுபோலவே 2,000 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 10 தொழிலாளர்களையும் மீட்புக்குழுவினர் மீட்டு வந்தனர்.

மீட்கப்பட்ட 11 தொழிலாளர்களில் சிலர் ஓரளவுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். அதேசமயம் சிலரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்தது. அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

One (C-blue helmet) of twenty-two Chinese miners is saved from hundreds of metres underground where they had been trapped for two weeks after a gold mine explosion in Qixia, in eastern China's Shandong province on January 24, 2021.

விபத்தில் சிக்கிய 22 தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழக்க, 11 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சிய 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.