பலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..
கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். சிலர் முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..
சிலர் முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருப்பர். ஒரு காதில் அதை மாட்டிக்கொண்டு மறுபுறம் இன்னொரு காதில் மாட்டாமல் தொங்கவிட்டபடி சிலர் இருக்கின்றனர். சிலர், மூக்குக்குக் கீழே இருக்கும்படி அணிந்துள்ளனர். இப்படி முகக்கவசம் அணிவதால் எந்தப் பயனும் இல்லை. முகக்கவசத்தை இரு காதுகளில் மாட்டி, வாய் மற்றும் மூக்கு முழுவதுமாக மறைந்திருக்கும்படி அணியவேண்டும். இன்னும் சிலர் கூட்டமான பகுதிகளுக்குச் செல்லும்போது மட்டும் முகக்கவசத்தை அணிகின்றனர். மற்றவர்களிடமிருந்து நமக்கு SARS-CoV-2 கிருமி பரவாமல் இருக்கவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் முகக்கவசத்தை சரியான விதத்தில், எப்போதும் அணிவது அவசியம்.
பல முகக்கவசங்கள் மேற்புறம் குறுகியதாகவும் கீழே விரிந்ததாகவும் இருக்கும். குறுகிய மேற்புறத்தை மூக்கின்மேல் வைத்து அழுத்தினால் அது சரியாக மூக்கின்மேல் பொருந்திக்கொள்ளும். கீழ்ப்பாக்கம் வாயை மூடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட முகக்கவசத்தை சிலர் அவசரத்தில் மாற்றி அணிந்து கொள்கின்றனர். இது முகத்தில் சரியானபடி பொருந்தாது. ஆகவே, அதனால் பயன் இராது.
சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது, எது வெளிப்புறம் வரவேண்டும் என்று கவனித்து அணியவேண்டும். சிலர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கம் முகத்தில்படும்படி அணிகின்றனர். வெளியே இருக்கக்கூடிய பக்கம் உள்ளே வரும்படி மாற்றி அணிந்தால் கிருமி தொற்றியிருக்கும் வெளிப்புறம் நேரடியாக மூக்கு மற்றும் வாய்மீது படுவதால் கிருமி பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, முகக்கவசத்தின் பக்கங்களை மாற்றி அணிந்துவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்..
சிலர் முகக்கவசத்தை அடிக்கடி கையினால் தொட்டுச் சரிப்படுத்திக்கொண்டே இருப்பர். அப்படிச் செய்வது தவறு. முகக்கவசத்தின் வெளிப்புறத்தை கைகளால் தொடும்போது கிருமியைத் தொடுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே, அடிக்கடி முகக்கவசத்தை சரி செய்வது மற்றும் கழற்றி திரும்பவும் அணிவது ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். தவிர்க்கமுடியாமல் சரிசெய்ய நேரிட்டால், காதுகளில் அணியக்கூடிய பட்டையை இழுத்துச் சரிசெய்யலாம். ஆனால், உடனடியாக கைகளைச் சோப்பு பயன்படுத்தி அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும்..
பலர், முகக்கவசத்தை வேண்டா வெறுப்பாக அணிகின்றனர். ஒருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், வீடுகளில் துணிகளால் செய்த முகக்கவசங்கள் ஆகியவற்றைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பயன்படுத்திக் கழுவி, நல்ல வெயிலில் உலர்த்தி பின்னரே அணிய வேண்டும்.