எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.
நம்மில் பலரும் எதிர்மறையாக ஏதாவது ஒன்று நடந்து முடிந்துவிட்ட பின்பு அதைப்பற்றி அதிகமாக சிந்திக்கிறோம். பேச கூடாத ஏதாவது ஒன்றை ஆத்திரத்தில் பேசிவிட்டு, ‘அப்படி நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கக்கூடாது’ என்றும், பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்டு, ‘அதை பார்த்தது தவறாகிவிட்டதே’ என்றும், கேட்கக்கூடாத செய்தி எதையாவது கேட்டுவிட்டு, அதை நினைத்தும் புலம்பிக்கொண்டிருப்போம்.
கண்கள் பார்க்கும். காதுகள் கேட்கும். வாய்கள் பேசும். அந்த உறுப்புகளுக்கு தெரியுமா, எது நல்லது எது கெட்டது என்று?
தெரியாது!
நாம் தேவையற்றதை பார்க்கக்கூடாது. தேவையற்றதை பேசக்கூடாது. தேவையற்றதை கேட்கக்கூடாது என்றால், நமக்கு புலனடக்கம் தேவை. நம்மிடம் ஐந்து புலன்கள் இருக்கின்றன. நாம் இடும் கட்டளைகளின்படி இயங்கவேண்டிய அந்த புலன்கள் இன்று, சூழ்நிலை என்ற எதிராளியின் வசப்பட்டு நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.
நாம் வார்த்தைகளால் ஒருவரை கண்டபடி பேசிவிடுகிறோம் என்றால், பேசிய வாய் ஒரு ஜடப் பொருள். ஆனால் அவரை வேதனைப்படுத்திய சக்தி, அந்த வார்த்தைகளில்தான் இருக்கிறது. நாம் பார்க்கும் காட்சியால் மனது சலனப்படுகிறது என்றால், அதை பார்க்கும் கண்களால் அந்த சலனம் உருவாகவில்லை. அதை பார்த்து நமக்குள் உருவாகும் கண்ணோட்டத்தால்தான் அந்த சலனம் உருவாகிறது. தகவல்களை கேட்கும் காதுகளுக்கும் எந்த சக்தியும் இல்லை. அதன் வழியே உள்வாங்கிக்கொள்ளும் தகவல்களுக்குத்தான் நம் எண்ணங்களிலும், நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.
நமது ஐந்து புலன்களும் குதிரைகளாக ஓடிக்கொண்டிருந்தாலும் அவைகளோடு பிணைக்கப்பட்டு கண்களுக்கு தெரியாத கடிவாளங்களாக செயல்படுவது நம் மனமும், புத்தியும்தான். அந்த கடிவாளங்கள்தான் நம் கட்டுப்பாட்டிற்குள்ளும், நம் கைகளுக்குள்ளும் இருக்கவேண்டியவை.
புலனடக்கத்தின் மூலம் நாம் சூட்சுமமாக செயல்படும் கண்களுக்கு புலப்படாத மனதை அடக்கவேண்டும். நமது மனதிற்கு கண்கள் இல்லாமல் பார்க்கும் சக்தியும், காதுகள் இல்லாமல் கேட்கும் சக்தியும், வாய் இல்லாமல் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. ஆனால் அந்த சக்தியை நாம் உணருவதில்லை. மேம்படுத்துவதுமில்லை.
இந்த இயந்திரமயமான உலகத்தில் அடிக்கடி நாம் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். ‘தெரியாமல் பேசிவிட்டேன்’ என்பதன் மூலமும், ‘தேவையற்றதை பார்த்துவிட்டேன்’ என்பதன் மூலமும், நம் கட்டுப்பாட்டை மீறி அனைத்தும் நடந்துகொண்டிருப்பதை ஒத்துக்கொள்கிறோம். சிந்தித்து செயல்படுவது என்ற நிலை தலைகீழாக மாறி, செயல்பட்டுவிட்டு சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
இதை படிக்கும்போது, ‘ஒரு சம்பவம் திடீரென்று நடந்துவிடும் போது சிந்திக்க நேரம் இருக்காதே! உடனடியாக செயல்படவேண்டிய கட்டாயம் அப்போது ஏற்படுமே?’ என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்.
எப்போதும் அமைதி தவழும் குளம் போன்று நிதானத்தோடு இருந்தால் எந்த சம்பவத்தாலும் நம்மை சலனப்படுத்த முடியாது. என்ன நடந்தாலும் நாம் அமைதியாக இருப்போம். அப்போது நாம் சிந்தித்துதான் செயல்படுவோம். சிந்தித்து செயல்படும் பக்குவம் நமக்கு வந்துவிட்டால், அடுத்து சரியாக சிந்திக்கும் தெளிவு வந்துவிடும்.
தெளிவாக சிந்தித்து தெளிவாக செயல்பட நமக்கு சுய பயிற்சி தேவை. அந்த பயிற்சியை எப்படி செய்யவேண்டும் தெரியுமா?
‘அடுத்தவர்களை வலிக்கவைக்கும் வார்த்தைகளை எந்த நேரத்திலும் பயன்படுத்தமாட்டேன்’
‘எனக்கு எதிராய் யார் எப்படி நடந்து கொண்டாலும் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தமாட்டேன்’
‘யார் என்ன செய்தாலும் என் கையே நீ கட்டுப்பாட்டில் இரு. நீ ஓங்கக்கூடாது’
‘எவ்வளவுதான் அவமானம் சூழ்ந்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்தும் காரியத்தில் இறங்கமாட்டேன்’
என்று உங் களுக்குள்ளே கூறி, இந்த விஷயங்களை அடி மனதில் ஆழமாக பதித்துவிடவேண்டும்.
நமது மனதும் ஒரு கம்ப்யூட்டர்தான். அதில் மேற்கண்ட நல்ல விஷயங்களை ‘புரோகிராம்’ போன்று பதித்து விடுங்கள். அப்போது கீபோர்டு போன்ற உங்கள் கண், காது, வாய்க்கு எந்த சக்தியும் இருக்காது. என்ன நடந்தாலும் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் அமைதியான புரோகிராம் தான் வெளிப்படும். அதன் மூலம் உங்கள் செயல்களில் தெளிவு ஏற்படும். நீங் கள் தவறானவைகளை கேட்கவோ, பார்க்கவோ பேசவோ மாட்டீர்கள்!