வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசி - இது தான் விஷயமா?

வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் மூலம் வாட்ஸ்அப் தெரிவித்தது. இதனை பலர் படிக்காமலேயே புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க Agree ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கின்றனர்.

 

 

முந்தைய அப்டேட்கள் போன்று இல்லாமல், புது அப்டேட் பயனர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் வாட்ஸ்அப் அதன் பயனாளிகள் தகவல்களை எப்படி கையாள்கிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொழில் நிறுவனங்கள் எப்படி பேஸ்புக் சேவைகளின் டேட்டாவை சேமிப்பது, பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் வாட்ஸ்அப் எப்படி ஒருங்கிணைந்து செயல்படும் என்ற விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

 

புதிய கொள்கை முறை பற்றி வாட்ஸ்அப் தனது வலைதள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படி முக்கிய மாற்றங்களில் ஒன்றாக மீடியா தரவுகள் எப்படி சர்வெர்களில் சேமிக்கப்படுகிறது என்ற விவரம் இடம்பெற்று உள்ளது. புதிய முறையில் தகவல் பார்வேர்டு செய்யப்படும்போது அதை எளிதில் வாட்ஸ்அப் சேமித்து கொள்ளும்.

 

 வாட்ஸ்அப்

 

மேலும் பயனர் வாட்ஸ்அப் சேவையை எப்படி பயன்படுத்துகின்றனர், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார், எந்த மாதிரி சேவைகளை பயன்படுத்துகின்றனர், ஆன்லைனில் எந்தெந்த நேரத்தில் இருக்கிறார் என பல்வேறு தகவல்களை பட்டியலிட்டு இருக்கிறது. 

 

இத்துடன் வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை இயக்கும் போது பரிமாற்ற விவரங்களான-  பேமண்ட் அக்கவுண்ட், பேமண்ட் முறை, வினியோக விவரம், பரிமாற்றம் செய்யப்படும் தொகை உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கும். பின் இவை பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்பட இருக்கிறது.

 

புதிய கொள்கைகளுக்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் பயனர்கள், பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். வாட்ஸ்அப் செயலி மாற்றங்களுக்கு பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஏற்பட்டு உள்ளது.

 

பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்த போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.