வாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்!

வாள்வெட்டு குழு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினார் சாட்சியாளர்!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து 6 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் முத்திரைச்சந்தியில் கடந்த மே 11ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.

அந்தக் கும்பல், நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தோரைத் தேடி முத்திரைச் சந்திக்கு வந்துள்ளது. அங்கு தேடி வந்தோர் இல்லாத நிலையில் வீதியில் நின்ற பொது மக்கள் மீதும் அவர்களது உடமைகளான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி மீதும் கொட்டான்கள், இரும்புப் பைப்புகளால் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

பாசையூரைச் சேர்ந்த கெமி என்ற அழைக்கப்படுபவரின் சகோதரனும் அவருடன் சேர்ந்தோருமே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது இரண்டு கால்கள் உள்பட உடலின் பல பகுதிகள் விஓபி போடப்பட்டுள்ளதால் தொழிலிழந்து வீட்டிலேயே படுக்கையில் உள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அடையாள அணிவகுப்பில் 42 விளக்கமறியல்காரர்களில் சந்தேக நபர்கள் 6 பேரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இருவரின் உதவியுடன் தூக்கிவரப்பட்ட சாட்சி, மூன்று சக்கர வண்டியிலிருந்து சந்தேக நபர்கள் மூவரை அடையாளம் காட்டினார். வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான் வி.ரி சிவலிங்கம், சந்தேக நபர்கள் 6 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கையும் ஒத்திவைத்தார்.