மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள்.ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல. ஆனால் அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் மகிழ்ச்சியான நபராக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் நிம்மதி இன்றி தவிப்பார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. உள் மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எந்த விஷயத்தையும் ரசித்து, அனுபவித்து செய்ய முடியாது. வாழ்க்கையில் நிம்மதி நிலைத்திருக்காது. முகத்தில் எவ்வளவு புன்னகையை வெளிப்படுத்தினாலும் உண்மையிலே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் துக்கம்தான் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். போலி புன்னகையால் மகிழ்ச்சியை ஒருபோதும் நிரந்தரமாக்க முடியாது.
மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பவர்கள், வாழ்க்கை எப்போதுமே கடினமானது அல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மகிழ்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் கடுமையானதாகவே தோன்றும். எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு கடுமையாக முயற்சிக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் சோகமும், ஏமாற்றமும்தான் நேரும் என்று தாங்களாகவே முடிவு செய்துவிடுவார்கள்.
மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பவர்கள் யார் மீதும் எளிதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நம்பிக்கையின்மை தலைதூக்கும். மற்றவர்களை நம்புவதற்கு பயப்படுவார்கள். அதிலும் புதிய நபர்களிடம் அதீத பயம் கொள்வார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்களை சந்திக்கும் நண்பர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வார்கள்.
மகிழ்ச்சியற்று இருப்பவர்கள் தங்களை சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்கள் மீதுதான் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உலகில் நடந்த மோசமான நிகழ்வுகள், எதிர்மறையான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் நேர்மறையான விஷயங்களை பற்றி பேசினால் ஆர்வமாக கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். அவை பற்றி பகிர்ந்துகொள்வதற்கு எந்த விஷயமும் அவர்களிடம் இருக்காது. மகிழ்ச்சியான மக்கள் உலகளாவிய பிரச்சினைகளில் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் இரண்டையும் தெரிந்துவைத்திருப்பார்கள்.
மகிழ்ச்சி அற்றவர்கள், மற்றவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள். மற்றவர்களை தங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொள்வார்கள். ஒரே நபருக்கு அதிர்ஷ்டமும், சூழ்நிலையும் மீண்டும் மீண்டும் சாதகமாக இருக்காது என்பதை மகிழ்ச்சியான மக்கள் புரிந்துகொள்வார்கள். தங்களின் அடையாளத்தையும், தனித்துவத்தையும் ரசித்து அனுபவிப்பார்கள். தோல்வியை சந்தித்தாலும் மற்றவர்களின் வெற்றியை மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியற்ற நபர்கள் தங்களை விட சிறந்துவிளங்குபவர்கள், சாதிப்பவர்கள் மீது வெறுப்பு கொள்வார்கள்.
மகிழ்ச்சியற்றவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனையை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பி இருப்பார்கள். எதன் மீதும் நம்பிக்கை வைக்காததால் எந்தவொரு முடிவையும் அறிந்துகொள்வதற்கு பொறுமை இருக்காது. தாங்கள் விரும்பியபடி நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். எப்போதும் அவர்களிடம் ஒருவித கவலை சூழ்ந்திருக்கும்.
மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் நேர்மறையான அதிர்வுகளையே வெளிப்படுத்தும். ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்