மாடுகளில் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் மாடுகளில் பரவி வரும் நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாடுகளில் ஒருவித தோல்நோய் இந்நாட்களில் பரவி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, புதுமுறிப்பு போன்ற பகுதிகளில் உள்ள மாடுகளில் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாடுகளின் உடலில் கட்டிகள் ஏற்பட்டுள்ளதுடன், அவை உடைந்து புண்ணாக மாறுவதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேய்ச்சல் குறைவடைந்து பால் உற்பத்தியும் குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் மாடுகளை விட கலப்பின மாடுகளையே இந்த நோய் அதிகம் தாக்குவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி எஸ்.வசீகரனிடம் இது குறித்து நாம் வினவியபோது, ஆபிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் கால்நடைகளில் பரவிய வைரஸே இதுவென கூறினார்.
எருமைகள் மற்றும் மாடுகளிடையே மாத்திரமே இந்த வைரஸ் பரவும் என்பதுடன், மனிதர்கள் அல்லது வேறு விலங்குகளுக்கு பரவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோய்வாய்ப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும் எனவும் வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் கூறினார்.
இந்த வைரஸூக்கு இதுவரை மருந்துகள் இல்லை என்பதுடன், சில நாட்களில் தானாகவே மறைந்துவிடக் கூடியது எனவும், வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் மேலும் குறிப்பிட்டார்.