புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
பெற்றோரின் கடமை பிள்ளைகளுக்கு சோறு போட்டு வளர்ப்பது, படிக்க வைப்பது, நல்ல உடை வாங்கிக் கொடுப்பது, பாதுகாப்பதோடு முடிந்துவிடுவதில்லை. புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
டீன்ஏஜ் பருவம் தனக்குள்ளே ஈகோவை வளர்த்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பருவம். பெற்றோர் சொல்லை மீறிப் பார்ப்போமே என்று தோன்றும். மொத்தத்தில் ‘பெற்றோர்கள்தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு முதல் எதிரி’ என்று நினைக்கும் பருவம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது இமாலய சாதனை. அதை செவ் வனே செய்து முடிக்க பெற்றோர் பெரும் முயற்சி எடுக்கவேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
ராகவ் பள்ளியில் முதல் மாணவன். அது அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் கல்லூரியில் அந்த புத்திசாலித்தனம் எடுபடவில்லை. நாளுக்கு நாள் படிப்பில் பின்தங்கினான், ஆனால் படிக்கும் நேரம் குறையவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தான். பெற்றோர் குழம்பினர். கல்லூரியில் போய் விசாரித்தும் பார்த்தார்கள். தன் மகன்மேல் எந்தக் குறையுமில்லை. பிறகு அவனுடைய புத்தக பையை சோதனை போட்டபோதுதான் உண்மை புரிந்தது. அத்தனையும் கவர்ச்சி நிறைந்த ஆபாச புத்தகங்கள். தினமும் அதைத்தான் அவன் பார்த்து, படித்துக் கொண்டிருந்திருக்கிறான்.
அதை படித்து எப்படி கல்லூரியில் மார்க் வாங்க முடியும்? என்று வருந்திய பெற்றோர், குடும்பநல மருத்துவர் உதவி யுடன் கவுன்சலிங் செய்து புரிய வைத்து, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி திசை திருப்பிவிட்டனர்.
இன்று ராகவ் பிரபலமான பொறியாளர். உயரமான கட்டிடத்தில் நின்று கடந்த காலத்தை நினைக்கும்போது அவனுக்கே அது ஆச்சரிய அனுபவமாக இருக்கிறது.
மனீஷாவின் வயது 45. வெளிநாட்டில் வசிக்கிறாள். அலுவலகத்தில் பெரிய பதவி. கைநிறைய சம்பாதிக்கிறாள். வசதியான வாழ்க்கை. தன் ஒரே மகளை கல்லூரிக்கு அனுப்பும்போது ‘ஒழுங்காக படி. காதலில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்காதே’ என்று அறிவுரை கூறிவைத்தாள். இப்படி மகளுக்கு அறிவுரை கூற காரணம், அவளுக்கு டீன்ஏஜில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்!
மகளுக்கு அறிவுரை கூறும் இவள், கல்லூரியில் படிக்கும்போது ஊரே பயப்படும் ஒரு ரவுடியை காதலித்து, பெற்றோரை கதற வைத்தவள். பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு ரவுடியோடு ஓட நினைத்ததை இன்று நினைத்தாலும் அவள் உடல் நடுங்குகிறது.
சினிமாப் படங்களில் வருவதுபோல் ‘நான் திருமணம் செய்துக் கொண்டு அவரை திருத்திவிடுவேன்’ என்று பெற்றோரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் ஒருநாள், அவன் எதிரிகளால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். அதன் பின்பு வந்த செய்திகள்தான், அவன் மகாகொடூரன் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
பின்பு மகள் அந்த ஊரிலே இருந்தால் அவள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பெற்றோர், அவளுக்காக இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்து போய்விட்டார்கள். சில ஆண்டுகளில் அவளுக்கு திருமணம் நடந்தது. கணவரோடு வெளிநாட்டிற்கு போய் வசித்தாள்.
இப்போது கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு அவள் அறிவுரை கூறும்போது, இவளுக்காக அம்மா-அப்பா நடத்திய போராட்டம், கதறல், அறிவுரை, தியாகம் எல்லாம் ஒன்றன்பின்ஒன்றாக நினைவுக்கு வந்தது. அவளை பொத்திப் பொத்தி காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள். இன்று தன் மகள் டீன்ஏஜில் இருக்கும்போது இவளும், தன் தாயைப்போல் பதற்றம் அடைகிறாள்.
டீன்ஏஜ் என்பது ஒரு மேஜிக் பருவம். காதல் கண்ணை மறைக்கும். அப்போது அறிவு மங்கும். கடந்து வந்த பிறகு தான் விழவிருந்த அதலபாதாளத்தின் அளவு தெரியும்.
பிள்ளைகள் டீன்ஏஜ் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. பொறுமையும் அவசியமாகிறது.
பக்குவப்பட்ட அறிவு நம்மை வழிநடத்தும். பக்குவப்படாத செயல்கள் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்!