பச்சிளம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்...

பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது.

பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது. 

 

தாயின் கருவறையில் கருவாகும் அனைத்துக் குழந்தைகளையும் 37 வாரங்கள் வரை கவனமாகக் காப்பாற்றி, பின்னர் 37-லிருந்து 40 வாரங்களுக்குள் முழுமை அடைந்த நிறைமாதக் குழந்தையாகப் பிறந்திட உதவ வேண்டும். அப்படிப் பிறக்கவிருக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் கருவறைக்கு உள்ளேயும், பிறந்த பின்னரும், பெரும் சவால்கள் காத்திருக்கும்.

 

கருவறைத் தொற்றுகள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் பாதித்த தாய்மார்கள், குறைமாதப் பிரசவம், பிரசவ நேர உபாதைகள், சிசு பிறந்ததும் நடந்திடும் முதல் சுவாசக் கோளாறுகள், பிறந்த பின்னர் வந்திடும் சிசுத் தொற்றுநோய்கள் எனப் பல உயிர் போராட்டங்களுக்கு இடையேதான் பிறக்கும் பல குழந்தைகள் ஜீவிக்கத் தொடங்குகின்றன.

 

 

1. தாய் கருவறைத் தொற்றுகள் - முறையான மாதாந்தர மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தடுக்கலாம்.

 

2. கர்ப்பகால சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் என்பது சில தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னை. இவற்றுக்குத் தக்க நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனை பெற்று வந்தால், கருவிலிருக்கும் குழந்தைக்குப் பாதிப்புகள் பெரிதாய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

 

3. பிறந்ததும் அழாத, மூச்சுவிடாத குழந்தை அதனால் ஏற்படும் மிகப்பெரும் உயிர் அபாயத்துக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் அதிலும் முக்கியமாகப் பக்கவிளைவுகள் எதிர்பார்க்கப்படும் பிரசவங்களுக்கு, சிசு மருத்துவம் பயின்ற, அனுபவம் பெற்ற சிறப்பு பச்சிளங்குழந்தை மருத்துவர் கொண்டு பிரசவம் பார்த்தல் நலம். பிறந்து 10 நிமிடங்களுக்குள் இத்தகைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தற்கால நவீன மருத்துவ யுக்திகள் கொண்டு குழந்தையைப் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்க முடியும்.

 

4. சிசு உயிர் காக்கும் அனைத்து வசதிகள்கொண்ட மருத்துவமனைக்குத் துரிதமாகக் கொண்டு சென்று, பிரசவம் பார்த்து, சிசு தீவிர சிகிச்சை மையத்தின் உயர் பாதுகாப்பில் பராமரித்து, குறைமாதக் குழந்தைகளைக்கூட நவீன விஞ்ஞான மருத்துவத்தின் தொடர் வளர்ச்சியால் எளிதாய் காப்பாற்றிட முடியும்.

 

5. சிசு அபாய தொற்றுகளுள், குழந்தை பிறந்த முதல் 28 நாள்களில் சிசுக்களுக்கு ஏற்படும் தொற்றுகள் மிக மோசமானவை. அவற்றை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அந்தக் குழந்தைகளையும் பெரும் பாதிப்புகளின்றிக் காப்பாற்ற முடியும்.

 

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான சிசு மருத்துவ வசதிகள் கொண்ட, நிறைவான சிசு உயர்சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனையில், கைதேர்ந்த மகப்பேறு மருத்துவர் மேற்பார்வையில், முறையாகப் பயின்ற சிசு மருத்துவர் உதவியுடன் பிறப்பது... குழந்தைக்கும் அதன் பாதுகாப்புக்கும் நல்லது.