யாழில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கைதான நபர்கள் தொடர்பில் நீதவான் வழங்கியுள்ள கட்டளை!
சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 24 பேரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அத்துடன் பிள்ளைகளை செல்லமாக வளர்த்தால் செல்லமாகவே வீட்டில் வைத்திருக்க வேண்டும். வெளியில் குற்றச்செயல்களில் ஈடுபடவிட்டால் நீதிமன்றம் கட்டுக்காவலில் வைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சந்தேக நபர்களின் பெற்றோருக்கு நீதிவான் ஏ.பீற்றர் போல் அறிவுரை வழங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம் இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த ரணா பிரசாத் வயது -24 மருதனார்மடத்தைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் வயது-20 ஆகிய இருவரது பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்தக் கொண்டாட்டம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பிறந்தநாள் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற 40இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அவர்களில் 26 பேரை மட்டும் கைது செய்த பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகத் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் 15ஆம் திகதி இரவு முற்படுத்தினர். சந்தேக நபர்களிடம் ஒவ்வொருவராக இன்று அதிகாலை வரை வாக்குமூலம் பெறப்பட்டது.
சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கில் முற்படுத்தப்பட்ட சிறுவர்கள் இருவரது பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், அவர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்தார்.
ஏனைய 24 பேரையும் வரும் ஜூன் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் 14 பேர் சார்பில் சட்டத்தரணி வீ.கௌதமன், கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து பிணை விண்ணப்பம் செய்தார்.
எனினும் அன்றைய தினம் பிணை வழங்க மறுத்த மன்று, சந்தேக நபர்கள் 24 பேரையும் இன்று மன்றில் முற்படுத்த சிறைச்சாலைக்கு உத்தரவிட்டது. அத்துடன், சந்தேக நபர்களின் பெற்றோரை மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களின் பெற்றோரும் மன்றில் முன்னிலையாகினர்.
பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்களை கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் 24 பேரும் தலா 2 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.
முதல் 8 சந்தேக நபர்களும் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமையும் அடுத்த 8 சந்தேக நபர்களும் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையும் ஏனைய 8 சந்தேக நபர்களும் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் கையொப்பமிடவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் வெளியில் இருக்கும் காலப்பகுதியில் சந்தேக நபர்கள் குற்றச் செயல் எவற்றிலும் ஈடுபடக் கூடாது" என்று நீதிவான் பிணை கட்டளையை வழங்கினார்.