வெற்றியை தரும் பாராட்டு

ஒவ்வொரு நற்செயலையும் பாராட்டும்போதுதான் அடுத்தடுத்து அதேபோல் செய்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஒருவர் மற்றொருவரைப் பாராட்டும்போதுதான் அவரை ஊக்கப்படுத்த முடியும். ஒருவர் போட்டியில் வென்றால் மட்டுமே அவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்து விடக்கூடாது.

 

ஒவ்வொரு நற்செயலையும் பாராட்டும்போதுதான் அடுத்தடுத்து அதேபோல் செய்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுகிறது. மேலும், பாராட்டியவர் செய்த நல்ல செயல் களைத் தானும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு ஏற்படும். தோல்வி அடைந்தவரைக் கூட பாராட்டலாம். அப்போது அவருக்கு கிடைத்த அந்த பாராட்டு மேலும், அவரை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. 

 

நாம் செல்லும் பாதையில் கிடக்கும் முட்களை ஒருவர் அகற்றினாலும்கூட, அவரை மனதார பாராட்டுங்கள். முதியவருக்கு ஒருவர் பாதையைக் கடக்க உதவினாலும் பாராட்டுங்கள். பயணங்களின் போதும் ஒருவருக்கொருவர் சிறுசிறு உதவிகள் செய்தாலும், மனம் திறந்து பாராட்டுங்கள். ‘இதுக்குப் போய் பாராட்ட வேண்டுமா’ என்ற எண்ணம் வந்தால், அதை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள். எவன் ஒருவன் பிறர் செய்யும் நற்செயல்களைப் பாராட்டுகிறானோ, அவனே பாராட்டு பெறவும் தகுதி உடையவனாகிறான்.

 

 

பெற்றோரின் பாராட்டு

 

முதலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பரந்தமனப்பான்மை வளரும். நண்பர்கள் சின்ன சின்ன விஷயங்களை அழகாக செய்யும் போதும், பாராட்டுங்கள். அது உங்கள் நண்பரை பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிக்கத் தூண்டும்.

 

நாநலம் என்னும் நலனுடமை, அந்நலம்

 

யாநலத்து உள்ளதூஉம் அன்று

 

என்கிறார், வள்ளுவர்.

 

அதாவது, நாம் பேசும்போது உண்டாகும் நன்மைகளை விட, மற்றவற்றால் எந்தவிதமான நன்மைகளும் வரப்போவது இல்லை. எனவே, எந்தவிதத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரையும் பாராட்டுங்கள். பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். பாராட்டும்போதுதான் புதுப்புது கலைஞர்களை உருவாக்க முடியும். பகையை நட்பாக மாற்றுகிறது பாராட்டு.எவன் ஒருவன் தன் பகைவனையே பாராட்டுகிறானோ, அப்போது அங்கு ‘பகைமை’ என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகிறது. ஒருவரைப் பாராட்டும்போது அதனால், அவருக்கு மட்டும் பெருமை வாய்ப்பதில்லை. அவரது பெற்றோர், நண்பர்கள், சமுதாயம் என்று நாட்டிற்கே பெருமைதான். அப்துல் கலாம், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஒருவர் செய்யும் சிறிய நற்செயல்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய வெகுமதியே இந்த பாராட்டுதான்.