இந்தியாவில் ஒரே நாளில் 15,915 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் ஒரே நாளில் 15,915 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 15,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இட்சத்து 11 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், புதிதாக 307 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 269 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேநேரம் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 181 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மஹராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியன விளங்குகின்றன. மஹாராஷ்டிராவில் இந்த வைரஸினால் இதுவரை 1,24,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 5,893 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று தமிழகத்தில் 54,449 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 666 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.