``கணவரைவிட நான் மூத்தவள்; இதனால் பிரச்னை வருமா?'' இளம்பெண்ணுக்கு நிபுணரின் பதில் #LetsSpeakRelationship
``அந்தக் கேலிகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்த எனக்கு, இந்த `அக்கா மாதிரி' விஷயம் மட்டும் பயமாகத்தான் இருக்கிறது.''
``எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. என் கணவரைவிட நான் இரண்டு வருடங்கள் பெரியவள். பரஸ்பரம் காதலைச் சொன்ன பிறகுதான் வயது வித்தியாசம் தெரிந்ததால், அந்த விஷயம் எங்கள் இருவருக்குமே ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. அதனால் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். சந்தோஷமாக இருக்கிறோம். ஆனால், என் தோழிகள், `ஒரு குழந்தை பிறந்தவுடன் நீ அவருக்கு அக்கா மாதிரி ஆயிட்டா என்னடி பண்ணுவே' என்றும், `எங்கக்காவைவிட எங்க மாமா ஆறு வயசு பெரியவர். ஆனா கல்யாணமாகி அஞ்சு வருஷத்துல என் அக்காதான் மாமாவைவிட பெரியவ மாதிரி ஆகிட்டா. நீ வேற இப்போவே ரெண்டு வருஷம் மூத்தவ...' என்றும் பயமுறுத்துகிறார்கள்.
சிலர், எங்கள் வயது வித்தியாசத்தைச் சொல்லிக்காட்டி கேலியும் செய்திருக்கிறார்கள். என்றாலும் அந்தக் கேலிகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்த எனக்கு, இந்த `அக்கா மாதிரி' விஷயம் மட்டும் பயமாகத்தான் இருக்கிறது. இன்னொரு விஷயம், சில நேரங்களில் அவர் சொல்வதை நான் கேட்கவில்லையென்றால், `சின்னப் பையன்னுதானே நான் சொல்றதை நீ கேட்க மாட்டேன்கிற' என்கிறார். அதே மாதிரி, நான் சொல்வதற்கு அவர் காதுகொடுக்கவில்லையென்றால், `இவ வயசுல பெரியவங்கிறதால அட்வைஸ் பண்றா. நாம எதுக்கு இவ பேச்சைக் கேட்கணும்னு நினைக்கிறியா?' என்று கேட்டுவிடுறேன். எங்களுக்குள் இதுபோன்ற பேச்சுகள் மறுபடியும் எழாமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி
சச்சின் - அஞ்சலி முதல் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்வரை தங்களைவிட மூத்த பெண்களை மணம்முடித்த செலிப்ரிட்டிகள் பலர், சமூகக் கேலிகளை எல்லாம் புறந்தள்ளி சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்!
வாசகியின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்கிறார் உளவியல் ஆலோசகர் கண்ணன்.
``உங்கள் கேள்வியிலிருந்தே `வயது வித்தியாச' பிரச்னை உங்கள் இருவருடைய மனங்களில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் உங்களிருவரின் காதலும் திருமணத்தில் இணைந்திருக்கிறது. இன்றைக்குக் காதல் திருமணங்கள் அதிகரித்துவிட்டன. கல்லூரியில், வேலைபார்க்கிற இடங்களில் தோன்றுகிற காதல்களில், ஆண், பெண் இருவருமே ஒரே வருடத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் ஆண் மூத்தவனாக இருப்பது எவ்வளவு இயல்பானதோ அதே அளவுக்கு இயல்பானதுதான் பெண் மூத்தவளாக இருப்பதும்.
உங்கள் தோழிகள் சொல்வதுபோல, தன்னைவிட வயது மூத்த ஆண்களைத் திருமணம் செய்த பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, தன் கணவர்களைவிட வயது மூத்தவர்களாகத் தெரிவதற்குக் காரணம், அந்தப் பெண்கள் எல்லாம் தங்கள் தோற்றத்தின் மேல் அக்கறை இழப்பதுதான். கல்யாணம், குழந்தை என்று ஆன பிறகு தங்கள் உடலமைப்பில் அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. எடை கூடுவதை உணர்ந்தாலும், அதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல், அப்படியே அனுமதித்துவிடுகிறார்கள். குடும்பத்தைக் கவனிக்கும், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் அவர்கள் தங்களைப் பராமரிப்பதை தவறவிட்டுவிடுகிறார்கள்.
எனவே, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வது முக்கியம். இது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, தன்னம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் அமையும். மற்றவர்களின் `அக்கா', `ஆன்ட்டி' கிண்டல்களை பொருட்படுத்தத் தேவையில்லை என்றாலும், நமக்காக நம்மை பராமரித்துக்கொள்வது அவசியமில்லையா? அதனால் கீப் ஃபிட். ஆரோக்கியமான உணவுமுறை, முறையான உடற்பயிற்சி இரண்டும் இருந்தால் 40 வயதிலும் 30 போல தெரியலாம். இது உங்கள் கையில்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை உடல்ரீதியாக, உங்களுடைய வயது வித்தியாசம் ஒரு விஷயமே இல்லை.
சச்சின் - அஞ்சலி முதல் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்வரை தங்களைவிட மூத்த பெண்களை மணம்முடித்த செலிப்ரிட்டிகள் பலர், சமூகக் கேலிகளை எல்லாம் புறந்தள்ளி சந்தோஷமாக வாழ்ந்துவருதைப் பார்க்கிறோம். இன்னும் நம்மைச் சுற்றியும் நம் கண்ணுக்குத் தெரியாமல், இதுபோன்ற தம்பதிகள், தங்கள் வயதால் ஏற்படக்கூடிய எந்தப் பிரச்னைகளும் இன்றி மகிழ்வுடன் வாழ்கிறார்கள். நீங்களும் அதில் இணைந்துவிட்டீர்கள்... வாழ்த்துகள்.
காதல் என்பதே அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தன் துணையின் நிலைமையைப் புரிந்துகொள்வதும்தானே. வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களால் `இதெல்லாம் ஒரு விஷயமா' என்று சொல்லப்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள்கூட கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்பதால், `பெரியவள்னு அட்வைஸ் பண்றியா', `சின்னவன்னு கேட்க மாட்டேங்கிறியா' என்பது மாதிரியான பேச்சுகள் இனிமேல் உங்கள் இருவருக்குமிடையே எழாமல் பார்த்துக்கொள்வதுதான் தீர்வு. இந்தப் பேச்சுகள் தொடர்ந்தால், உங்களிருவருக்குள் மனரீதியான பிரச்னை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது கவனம்.
காதல் என்பதே அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தன் துணையின் நிலைமையைப் புரிந்துகொள்வதும்தானே. வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களால் `இதெல்லாம் ஒரு விஷயமா' என்று சொல்லப்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள்கூட கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்பதால், `பெரியவள்னு அட்வைஸ் பண்றியா', `சின்னவன்னு கேட்க மாட்டேங்கிறியா' என்பது மாதிரியான பேச்சுகள் இனிமேல் உங்கள் இருவருக்குமிடையே எழாமல் பார்த்துக்கொள்வதுதான் தீர்வு. இந்தப் பேச்சுகள் தொடர்ந்தால், உங்களிருவருக்குள் மனரீதியான பிரச்னை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது கவனம்.
வயதுதொடர்பான மற்றவர்களின் கேலி, கிண்டல்களை நீங்களே மனமுதிர்ச்சியுடன் அணுகுகிறீர்கள் என்பது நல்ல விஷயம். அதனால், அதுபற்றி நான் எதுவும் தனியாக சொல்லத் தேவையில்லை. கடைசியாக, எதிர்காலத்தில் உங்களுக்கு வேறொரு சந்தேகம் எழலாம் என்பதால், அதற்கான பதிலையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். தாம்பத்ய வாழ்க்கைக்கும், குழந்தை பிறப்புக்கும் உங்கள் வயது வித்தியாசத்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.
`க்யூட் கப்பிள்' என்று மற்றவர்கள் ரசிக்கும்படி வாழ வாழ்த்துகள்!''